Friday 10 January 2014


 
 
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு,
 இப்போது  திமுகவையும் கருணாநிதியையும்   திட்டி தீர்த்துக்கொண்டிருக்கும் பலரை
ப்போலஅப்போது  நானும் கருணாநிதியின் தீவிர ரசிகனாய் ஒரு  ஆர்வலராய் இருந்த  நேரம்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவாலயத்துக்கு அடிக்கடி வருவேன் ... ஓரமாய் அமர்ந்து அங்கு நடக்கும் காரியங்களை ஒரு வித ஆத்ம திருப்தியோடு  ரசித்துக் கொண்டிருப்பேன்.

‘ஆஹா, இப்படி ஒரு அற்புதமான இயக்கதில்(?) உலகத்தில் எவனுக்கும் கிடைக்காத ஒப்பற்ற ஒரு தலைவனுக்கு(!) தொண்டனாக இருப்பதையே’ பெருமை என கருதிக்கொண்டிருந்த காலம் அது.

அப்படி ஒருநாள் நான் அங்கு இருக்கும் வேளையில்  சில இளைஞர்கள் கலைஞரை பார்க்க ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வந்தார்கள்.

கலைஞரை பார்ப்பதென்பது எப்போதும் எவருக்கும் சுலபமான காரியமானபடியால் அந்த இளைஞர்கள் சற்று நேரத்தில் கலைஞரின் அறைக்குள் மாலையோடு போனார்கள்.

வெளியே வந்த  அந்த  மாணவர்களிடம் பேசியபோது மேற்படி மாணவர்கள் ,சென்னை பச்

சயப்பன் கல்லூரி மாணவர்கள் என்பதையும் கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் கழகத்தின் சார்பில் வேற்றி பெற்ற அவர்கள் தலைவரை பார்த்து மாலை அணிவித்து வாழ்த்து பெறுவதற்காக  வந்ததாகவும் சொன்னார்கள்.

பிறகு அந்த மாணவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள் அதன்பிறகுதான் அந்த விபரீதம் நடந்தது..

சற்று நேரத்தில் தலைவர் கலைஞர் அறிவாலயத்திலிருந்து கிளம்பப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

அறிவாலயத்தில் இருந்த செயல் மணியும் கருணாநிதியின் அப்போதைய ஓட்டுனராக இருந்த  மணியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கலைஞருக்கு அணிவித்த அந்த ஆளுயர மாலையை தூக்கி வந்து கலைஞரின் காரில் ஏற்றினார்கள்.

இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
நான் மணியிடம் ‘என்னண்ணே மாலைய தலைவர் வண்டில ஏத்துறீங்க..?’ என்றேன்.

அதற்கு மணி சைதாப்பேட்டையில் அன்று காலையில் காலமான ஒரு மூத்த திமுக கவிஞரின் பெயரைச்சொல்லிவிட்டு ’தலைவர் அவர் பாடிக்கு மாலை போடப்போறாருப்பா..’ என்றார் சர்வ சாதாரணமாக..

அன்றிலிருந்துதான் கருணாநிதி பற்றி எனக்குள் இருந்த பிம்பம் உடைய ஆரம்பித்தது..!








விழித்துக்கொண்டே பார்க்கின்ற
விபரீதக் கனவுகள்..?








திரைப்படஙகள் வெறும் கனவுகள்தாம்
அதுவும்
விழித்துக்கொண்டே பார்க்கின்ற
விபரீதக் கனவுகள்..?

சில வேளைகளில்
இந்த
கனவுகளைக் கண்டுமுடிக்குமுன்
கண்களே
காணாமல் போய் விடுகின்றன..?

சினிமா
என்ற மாயக்காற்றை
சுவாசித்தவர்களில்
பலர்
முதல் மூச்சிலேயே
மூர்ச்சையாகிப் போனார்கள்...!

இன்னும் சிலரோ
மூச்சிழுத்த அவசரத்தில்
தங்கள்
மூக்குகளையே உடைத்துக் கொண்டார்கள்....!

ஆனாலும்
நான் சினிமாவை நேசிக்கிறேன்..?

ஏனென்றால்
அதில் மட்டும்தானே
வில்லன்கள் வீழ்த்தப்படுகிறார்கள்..!

டி.அருள்செழியன்
ஆனந்தவிகடன்/1987


Wednesday 8 January 2014

மலையாள சினிமா உலகம் கொண்டாடும் நடிகர்,இயக்குநர்,திரைக்கதாசிரியர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு



சீனிவாசன் எனும் மனிதர்..!

நீண்ட நாள் பழகிய ஒரு பக்கத்து வீட்டுக்காரரைப்போல இயல்பாக பழகுகிறார் சீனிவாசன்..!
மலையாள சினிமாவில் தொட்ட இடங்களிலெல்லாம் தன் முத்திரையை பதித்து, திரைகதாசிரியர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்துவிட்ட சீனிவாசன், தான் திரையில் உலாவவிட்ட எதார்த்த கதாபாத்திரங்களைப் போலவே ஒரு எளிய எதார்த்த மனிதராக இருக்கிறார்.
எனது திரைக்கதை ஒன்றை விவரிப்பதற்காக கடந்த சில நாட்களாக சீனிவாசனை சாரை சந்திக்க நேரம் கேட்டுக்கொண்டே இருந்தேன்..
(ஏறக்குறைய ’ இது கொல்லன் தெருவில் ஊசிவிற்கும் முயற்சி’ என்று தெரிந்தே இந்த முயற்சியில் நான் இறங்கினேன் )
அவர் சென்னைக்கு வரும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே போனது,
இரண்டு நாளைக்கு முன்பு எர்ணாகுளத்திற்கு கிளம்பி வருமாறு சொன்னார் சீனிவாசன்..
*
ஞாயிறு இரவில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் மெயிலில் பயணிகளோடும், சக எலிகளோடும் பயணம் தொடர்ந்தது.
ஓடும் ரயிலின் சீட்டுக்கு கீழே எலிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
‘இந்த எலிகளை ஒழிக்க என்ன செய்யலாம்..’ என்று யோசித்தேன்.
தென்னக ரயில்வே ஒவ்வொரு ரயிலிலும் ரெண்டு மூன்று பூனைகளை வாங்கிவிடுவதே சிறந்த வழி என்று தோன்றியது.
ஏதாவது ஒரு குழந்தையை எலி கடித்து குதறுவதற்குள் தென்னக ரயில்வே, பொறுப்பை பூனைகளிடம் ஒப்படைப்பது நல்லது..?
(தென்னக ரயில்வேக்கு இதுபற்றி விரைவில் ஒரு கடிதம் எழுத வேண்டும்).
*
திங்கட்கிழமை காலையில் எர்ணாகுளம் ஜங்ஷனில் போய் இறங்கியதும் அருகேயே ரூம் எடுத்து குளித்துவிட்டு சீனி சாருக்கு போன் போட்டேன்
‘ஓ வந்தாச்சா.‘ என்றவர் ‘இன்றைக்கு எதிர்பாராத விதமாக ஒரு டப்பிங் வந்துட்டுது.. அதனால டைம் சரியா சொல்ல முடியல ஒரு மணி நேரத்துல நானே கூப்பிடுறேன் வெயிட் பண்ணுங்க..’ என்றார்.
*
நான் என் கல்லூரி நாட்களில் (1989) இரண்டாவதாக பார்த்த மலையாளப்படம் சீனிவாசன் எழுதி சத்தியன்அந்திக்காடு இயக்கிய ’வரவேழ்பு’ (Varavelpu) திரைப்படம்.
அப்போதெல்லாம் எனக்கு சீனிவாசனைப்பற்றி எதுவும் தெரியாது அதற்கு முன் நான் பார்த்த(1987) மோகன்லால் நடித்த ’ஜனவரி ஒரு ஓர்ம’ என்ற படம் எனக்கு பிடித்திருந்ததாலும் அந்த படத்தில் நடித்த மோகன்லாலின் நடிப்பு அதற்குமுன் பார்த்த தமிழ் சினிமா ஹீரோக்களின் நடிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததாலும் நான் மோகன்லால் தீவிர ரசிகனாக மாறி இருந்தேன்,
அதன் பிறகுதான் மமுட்டி,ஜெகதி ஸ்ரீகுமார், சீனிவாசன்,நெடுமுடிவேணு,லால் என்று துவங்கி இன்று நடித்துக் கொண்டிருக்கும் ஆசிப் அலி வரைக்கும் என்னால் கவனிக்க முடிந்த அத்தனை நடிகர்களையும் நான் கவனிக்க ஆரம்பித்தேன்.அந்தவகையில் சீனிவாசனையும் ஒரு நடிகராகத்தான் எனக்குத்தெரியும்.
தொண்ணூறுகளில் தினமணி வெள்ளிமணியில் சீனிவாசனின் படங்களைப் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தோடு ஒரு கட்டுரை வந்திருந்தது.
அந்த கட்டுரைதான் சீனிவாசன் என்ற அற்புதமான படைப்பாளியை எனக்கு அறிமுகப் படுத்தியது.
சீனிவாசனை ஒரு நடிகராக மட்டுமே அறிந்த, என் அறியாமையை விரட்டியதோடு அவர் ஒரு திரைக்கதையாசிரியர் மட்டுமல்ல வெற்றிகரமான இயக்குனரும் கூட என்று உணர்த்தியது அந்தகட்டுரை.
அதன் பிறகு ஏசியா நெட் டிவியில் நான் கண்ட ‘சிந்தாவிஷ்டாய சியாமளா’ ‘வடக்கு நோக்கி எந்திரம்’ ‘சந்தேசம்’ ஆகிய அவரது படங்கள் மலையாள சினிமாமேல் மேலும் மேலும் மரியாதையையும்,சீனிவாசன் மேல் எனக்கு மிகப்பெரிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.சீனிவாசன் திரைக்கதை எழுதி சிபிமலையில் இயக்கிய ‘தூர தூர ஒரு கூடுகூட்டாம்’ திரைப்படம் நான் மிகவும் ரசித்த சினிமாக்களில் ஒன்றாகிவிட்டது.

சீனிவாசனின் ‘சிந்தாவிஷ்டாய சியாமளா’ தங்கர்பச்சானால் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற பெயரிலும் ‘வடக்கு நோக்கி எந்திரம்’ கருணாஸால் ‘திண்டுக்கல் சாரதி’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டன.

சீனிவாசனின் கைவண்ணத்தில் மலையாளத்தில் பிரம்மாதமாக அழகுற வெளிவந்த இந்த படங்கள் தமிழில் அந்த அளவிற்கு சிறப்பாக தயாரிக்கப்படவில்லை என்பதே என் கருத்து.

அதே போன்று சீனிவாசன் எழுதி நடித்து கேரளாவில்அமோக வேற்றி பெற்ற ’உதயனாணு தாரம்’ தமிழில் ’வெள்ளித்திரை’யாகவும் ‘கதபறையும்போள்’ ‘குசேலனாகவும்’ தமிழில் கொல்லப்பட்டன.!
இந்த தோல்விகளுக்கெல்லாம் தயாரிப்பில் நடந்த குறைபாடுகளைத்தவிர வேறு காரணம் ஏதுமில்லை என்பதே என் கருத்து.
*
ஒரு அரை மணி நேரம் போயிருக்கும் சீனிவாசன் சாரிடமிருந்து அழைப்பு
எங்கே இருக்கிறீங்க..’
நான் விடுதியின் பெயரையும் இடத்தையும் சொன்னேன்
அங்கேயே இருங்க… நான் டிரைவரையும் காரையும் அனுப்புறேன்… வந்திருங்க..’
சார்.. எதுக்கு உங்களுக்கு சிரமம்.. நானே ஒரு ஆட்டோ பிடிச்சு வந்திர்றேன்..’ இது நான்,
வெண்டாம் நீங்க வழி கேட்டு வற்றதுக்கு சிரமப்படுவீங்க.. நான் கார் அனுப்புறேன் .. நேர சந்திப்போம்..’
*
சற்று நேரத்தில் ஒருவர் எனக்கு போன் செய்து நான் தங்கிருந்த முகவரியை உறுதி செய்துவிட்டு, ’கார் வந்து கொண்டிருக்கிறது.’ என்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் காரோடு வந்த டிரைவர் அனிஷ் எர்ணாகுளத்தின் சந்து பொந்துகளுக்குள் நுழைந்து என்னை நடிகர் லாலின் Lal media ஸ்டுடியோவிற்கு என்னை அழைத்துப்போனார்.
அங்கேதான் சீனிவாசன் டப்பிங்கில் இருந்தார்.
சற்று நேரம் அங்கு காத்திருந்தேன்.

*
சில காலத்திற்கு முன்புவரை பெரும்பான்மையான மலையாள சினிமாக்களின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் சென்னையில்தான் நடந்தன, ஆனால் இப்போது எர்ணாகுளத்தில் இந்த Lal media தவிர ,மோகன்லாலின் Vismayas Max ,மற்றும் Mega Studio என்று மூன்று நான்கு ஸ்டுடியோக்கள் இருக்கின்றன.இவற்றில்தான் இப்போது பெரும்பான்மையான மலையாள சினிமாக்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடந்து கொண்டிருக்கின்றன.
*
கொஞ்ச நேரத்தில் டப்பிங் அறையிலிருந்து வெளியே வந்த சீனிவாசன் சாருக்கு வணக்கம் சொன்னேன்.
என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ‘’வந்து ரெம்ப நேரமாச்சா.. ?’ என்றார்.
அருகே இருந்த ஒரு சோபாவில் என்னையும் உடகார்ச் சொல்லிவிட்டு உரையாட ஆரம்பித்தார் சீனிவாசன்.
*
என்னைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.
கதை சொல்ல ஆரம்பித்தேன்.
ஒரு கதையை சொல்லி முடித்தவுடன் ‘இனி சாப்பிட்டுட்டு வந்து பேசுவோம்..’ என்றவர் தன்னோடு என்னையும் அழைத்துப்போனார்.
*
மேலே இருந்து இறங்கி வரும் வழியில் நடிகர் திலிப்பும் ஜெயசூர்யாவும் வந்து அவரிடம் மரியதைகாட்டி மகிழ்ந்து சென்றனர்.
உணவுக்கூடத்துக்குள் நுழைந்தோம் நேராக கைகழுவும் வாஷ் பேஷினுக்கு என்னையும் அழைத்துப்போனார் யாரும் அவருக்கு கைகழுவ தண்ணீர் எடுத்துவரவில்லை, பவ்யமாக டவல் நீட்ட ஆளில்லை எல்லாம் எதர்த்தமாக இருந்தது..!
அங்கிருந்தவர்களில் அனேகம் பேர் அவரைப்பார்த்ததும் மௌனமாய் புன்னகைத்தார்கள். அந்த புன்னகைக்குள் ஒரு மரியாதை ஒழிந்திருந்ததை கவனித்தேன்.

காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் ஒன்றில் நானும், அவரும் அமர்ந்தோம்.
குண்டுகுண்டான சம்பா அரிசி சோறு, காய்கறி கூட்டு, மீன் குழம்பு, என்று எல்லோருக்கும் போல அவருக்கும் அவருடன் இருந்த எனக்கும் வந்தது.
அவருக்கு ஏதாவது சிறப்பு படையல் ஏதும் இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் கவனித்துப்பார்த்தேன்.
அங்கு எல்லோருக்கும் என்ன வழங்கப்பட்டதோ அதேதான் அவருக்கும் வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் சாம்பார்தான் தமிழர்களுக்கு பிடித்த பானம் என்று அவர் கருதியிருந்தார் போலும்
இரண்டு மூன்று முறை என்னிடம் ’சாம்பார் ஊத்திக்கிடுறீங்களா..?’என அவர் அக்கறையாகக் கேட்க, எனக்கும் சாம்பாருக்கும் ஆகாது என்று மீன் குழம்பில் மூழ்கிவிட்டேன்.
இடையில் ‘இந்த அரிசி சாப்பாடு உங்களுக்கு..’ என்று அவர் ஆரம்பிக்க
எனக்கு இதுதான் ரெம்ப பிடிக்கும் பழைய பாரம்பரிய தமிழ்நாட்டில் இதைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் ’ என்றேன்.
சாப்பிட்டு விட்டுவந்ததும் எனது இரண்டாவது திரைக்கதையையும் முழுமையாக கேட்டார்.
*
ஒரு இரண்டு மணி நேரம் அவரோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தது மறுபடியும் டப்பிங் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியது.
நாம் விடைபெறலானேன்
’மறுபடியும் நாம் பேசுவோம்.. கூப்பிடுறேன்..’ என்றவர் என்னை அனுப்ப டிரைவரை தேடினார்.
நெகிழ்ந்து போன நான் அதைக்காட்டிக்கொள்ளாமல்
’சார் நான் ஒரு வழிப்போக்கன்.. எனக்கு ஏன் இவ்வளவு கேர் எடுக்குறீங்க… உங்கள பாத்ததே எனக்கு சந்தோஷம்..’ என்றேன்.
இல்ல என்னத் தேடி இவ்வளவுதூரம் வந்திருக்கீங்க.. நான் உங்கள கவனிக்க வேண்டாமா..?’ திருப்பிக்கேட்டார் சீனிவாசன்.
*
ஒரு பெரும் நடிகர் இயக்குனர்,கதாசிரியர்,தயாரிப்பாளர் என அறியப்பட்ட கேரள மக்களால் கொண்டாடப்படும் சீனிவாசனோடு நான் அங்கிருந்த நேரத்தில் அங்கிருந்த யாரும் அவரிடம் பணிந்து பாசாங்கு செய்யவில்லை போலியாய் பொய்முகம் காட்டவில்லை.
எல்லோரும் நிமிந்தே நின்றார்கள்.ஆனால் கண்களில் மரியாதையும் புன்னகையில் அன்பும் இருந்தது.

காரணம் அங்கு மனிதர்களுக்கிடையில் அவரும் ஒரு மனிதராக இருந்தார்..?

'ஆயாளும் ஞானும் தம்மில்' (A yalum Njanum Thammil)


மீச மாதவன், சாந்துபொட்டு’, ‘அச்சனுறங்காத வீடு’, ‘அரபிக்கத ‘, ‘நீலத்தாமர’, ‘ஸ்பானிஷ் மசாலா’எலிசம்மா என்ற ஆண்குட்டி’ போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் லால்ஜோஸ் இயக்கத்தில் புதிதாய் வந்திருக்கும் மலையாள படம் ' ஆயாளும் ஞானும் தம்மில்' (Ayalum Njanum Thammil)

நான் பார்த்த லால் ஜோசின் முந்தைய படங்களை விட ஆழமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், கச்சிதமான காட்சியமைப்பு என்று மலையாள சினிமாவை மீண்டும் ஒருபடி தூக்கி நிறுத்தி இருக்கிறது இந்த படம்.

படம் பார்க்க போன போது தெருக்களில் மழை கொட்டிக் கொண்டிருந்ததாலோ என்னவோ.படம் ஆரம்பித்ததும் திரைக்குள்ளும் ஒரே அடை மழை.

மழையில் நனைந்து கொண்டிருக்கும் அந்த பிரபல கார்பரேட் மருத்துவமனையின், வாசல் முன் வேகமாக ஒலி எழுப்பியபடியே வட்டமடித்து வந்து நிற்கிறது ஒரு ஆம்புலன்ஸ்.

அந்த ஆம்புலன்சிலிருந்து உயிருக்கு போராடும் ஒரு சிறுமியை ஸ்டெச்சரில் துக்கி கொண்டு வர அந்த ஆஸ்பத்திரியிலும் நம் மனங்களிலும் ஒரு வித விறுவிறுப்பு தொற்றிக்கொள்கிறது.

குழந்தை ஜீவ மரண போராட்டத்தில் இருக்க.டூட்டி டாக்டராக இருக்கும் ரவிதரகன் (பிருதிவிராஜ்) குழந்தையை சோதித்துவிட்டு உடனடியாக குழந்தைக்கு ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்.

கொஞ்சம் முரட்டுத்தனமாக தோற்றமளிக்கும் (வட்ட செயலாளரான) குழந்தையின் அப்பா, கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் என் குழந்தைக்கு இன்னும் ஒரு ஆபரேஷன் வேண்டாம்’ என்று சொல்ல திரைக்கதை விறுவிறுப்பாகிறது.

திடுக்குற்று போகும் டாக்டர் ரவி தரகன்சார் நல்லா யோசிங்க உங்க குழந்தைக்கு தேவை இப்ப ஒரு சின்ன ஆப்பரேஷன்.. எனக்கு பீஸ் கூட வேண்டாம் .. ப்ளீஸ்.. ’என்று கடமை உணர்ச்சியுடன் கெஞ்ச ஆரம்பிக்கிறார்.

குழந்தையின் அப்பாவோ ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலயும் இப்படி சொல்லித்தான் ஆபரேஷனா பண்ணிட்டாங்க .. எங்ககளுக்கு எல்லாமே வெறுத்துப் போச்சு.. இதுக்குமேல இன்னும் ஒரு ஆபரேஷன் வேண்டாம்.. தெய்வம் விட்ட வழி.. என் குழந்தை எவ்வளவுநேரம் உயிரோட இருக்குமோ இருக்கட்டும்… அதுவரைக்கும் இருக்கட்டும்… இதுக்குமேல குழந்தைய கஷ்டப்படுத்த வேண்டாம்.. என்று விரக்தியிலும் உறுதியாக சொல்லிவிட்டார்.

ஆனாலும் ரவிதரகன் விடுவதாக இல்லை.மீண்டும் மீண்டும் அந்த அப்பாவை ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கிறார்.

சரி டாக்டர் இப்ப இந்த ஆபரேஷனை பண்ணிட்டா எங்குழந்தைய காப்பாத்திடலாமா..?’ என்று கோபமாய் கேட்கிறார் அப்பா.

இந்த ஆபரேஷன செய்யலைணா கண்டிப்பா குழந்தை செத்துப்போகும்.. ஆனா ஒரு வேளை ஆபரேஷன் சக்சஸ் ஆயிடுச்சுண்ணா.. உங்க குழந்தை பொழைச்சிடும்.. என்கிறார் டாக்டர்.

அதெல்லாம் வேண்டாம் ஆபரேஷன் பண்ணா எங்குழந்தை பொழச்சுக்கும்ணு உன்னால உத்தரவாதம் தர முடியுமா சொல்லு..? என்று கறாராகக் கேட்கிறார் அப்பா.

ஆபரேஷன் பண்ணினா ஒரு பத்து சதவீதம் குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கு.. ’என்று ரவிதரகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

நிறுத்து… ஆபரேஷன் சக்சஸ் ஆச்சுண்ணா பத்து சதவிகிதம்தான் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்குண்ணு நீயே சொல்ற.. அப்ப மீதி தொண்ணூறூ சதவிகிதம் .? அட போய்யா போய் வேற வேலைய பாரு..? என்று மீண்டும் உறுதியாக மறுத்து விடுகிறார் அந்த அப்பா.

ஆனால் ரவிதரகன் சக மருத்துவரக்ளின் ஆலோசனைகளையும் மீறி அந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய குழந்தை இறந்துவிடுகிறது.

ரவிதரகன் மீது கொலைப்பழி?

ஒரு கும்பல் மருத்துவ மனையை சூறையாடுகிறது. சக மருத்துவரகள் ரவிதரகனை பலவந்தமாக பின்வாசல் வழியே காரில் அனுப்பிவிட… கொலை வெறியோடு ஒரு கும்பல் அந்த காரை துறத்த.. கார் ஒரு வளைவில் திரும்பும்போது விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்கிறது.

இப்போது விபத்தில் சிக்கும் ரவி தரகன் காணாமல் போய் விடுகிறார்.

இப்போது நம் முன்னே மனிதாபிமானமும் கடமை உணர்ச்சியும் மிக்க மருத்துவராக காட்சியளித்த ரவிதரகன் தன் கல்லூரி நாட்களில் அற்பணிப்பு தன்மை உடையவராகவோ சிறந்த படிப்பாளியாகவோ இருந்ததில்லை என்பதிலிருந்து பிளாஷ் பேக் ஆரம்பிக்கிறது.

பல attempt க்கு பிறகு, கடைசி தேர்வில் கூட பிட் அடித்து மாட்டிக்கொள்ளும் சாதாரண மக்கு மாணவர்தான் ரவி தரகன்

ஒரு வழியாய் போராடி தேர்வுகளில் வெற்றிபெற்று டாக்டராகும் ரவி தரகன் மருத்துவக் கல்லூரியில் போட்ட ஒப்பந்தத்தின்படி ஒரு மலை கிராமத்து மருத்துவமனைக்கு வேண்டா வெறுப்பாக சேவையாற்ற வருகிறார்.

அங்கு அவருக்கு சீனியர் டாக்டராக இருப்பவர் சாமுவெல் (பிரதாப் போத்தன்) ’மருத்துவம் ஒரு தொழில் அல்ல , அது ஒரு சேவை’ என்று வாழும் பிரதாப் போத்தனுக்கும் வழி தவறி டாக்டராகி விட்ட தரகனுக்கும் இடையில் இயல்பாகவே இருக்கும் முரண்பாடுகளில்
கதை பயணிக்கிறது.

தொழில் ஆகிவிட்ட மருத்துவத்துறையையும் அதில் மலிந்து நிற்கும் ஊழலையும், முறை கேடுகளையும் அதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போவதுமாதிரி திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் பொறுப்பில்லாத டாக்டராக இருக்கும் ரவிதரகன் தான் பின்னாளில் டாக்டர் சாமுவேலால் பட்டை திட்டப்பட்ட வைரமாக மிளிர்கிறார்.
ஒரு நல்ல டாக்டர் என்பவர் வகுப்பில் முதல் மார்க் வாங்கி ஒரே அட்டம்டில் வெற்றி பெறுவ தாலேயே ஒருவர் சிறந்த டாக்டர் ஆகிவிட முடியாது என்பதை சொல்லால் சொல்வது மாதிரி பல காட்சிகள்..!
ஒரு நல்ல டாக்டருக்கு தேவை திடமான முடிவெடுக்கும் மனோபாவமே’ என்பதை கற்றுத்தருகிறார் டாக்டர் சாமுவேல்.

பணமும் அந்தஸ்த்தும் நிறைந்த பெரிய மருத்தவமனைகளை விட்டுவிட்டு ஏழைகளுக்கு உதவும் பொருட்டே இந்த மருத்துவமனையில் தலமை மருத்துவராக இருக்கும் டாக்டர் சாமுவேல்(பிரதாப்போத்தன்) ஒரு அற்புதமான பாத்திரப்படைப்பு.

ஒரு மருத்துவமனையின் துயரங்கள்,வேதனைகள், வலிகள் இவற்றோடு நகைச்சுவையும் கலந்துதிருப்பதால் படம் கலகலப்பாகவும் இயல்பாகவும் இருக்கிறது.

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் இந்த படம் பல நல்ல செய்திகளைச் சொல்லித்தரும்…!

7D Camera மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் ஜான் தன் பணியை அற்புதமாக செய்திருக்கிறார்.

'இந்தியன் ருபீ'க்கு பிறகு பிருதிவிராஜின் சினிமா வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும் துவக்கி வைத்திருப்பதோடு,பிரதாப் போத்தனின் சினிமா வாழ்விலும் இந்தபடம் ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது.

சில தடுமாற்றங்களுக்கு பிறகு மீண்டும் எழுந்து வரும் மலையாள சினிமா உலகின் சமிபத்தைய வெற்றிப்படங்களில் ஒன்றான ’ஆயாளும் ஞானும் தம்மில்’ இந்த ஆண்டின் பல விருதுகளையும் அள்ளிப்போகும் என்பதில் சந்தேகமில்லை.

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்..!


அன்பு அண்ணன் பராக் ஒபாமாவுக்கு,
வணக்கம்,
சமிபத்தில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே என்பவரை தங்களின் அமெரிக்க போலிஸ் நடு வழியில் வைத்து கைது செய்த சம்பவம் தேச பக்தி போதையில் உருண்டு கொண்டிருக்கும் என் போன்ற இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் அரசாங்கத்துக்கு போலி ஆவணங்களை தந்ததோடு தனது பணியாளருக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஊதியத்தை தராத தேவயானி கோப்ரகடேவை ஒரு கிரிமினல் குற்றவாளி போல நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எங்கள் நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோஷம் நீண்டகாலமாக ஒலித்துக் கொண்டிருந்தாலும் சட்டம் என்பது மேட்டுக்குடிகளின் காலுக்கு கீழே அழுக்கு படிந்து கிடக்கும் ஒரு கம்பளமாகவே காட்சியளிக்கிறது.

மேட்டுக்குடியின் முன் நின்று வாலை ஆட்டும் சட்டம் ஏழை எளியமக்களைக் கண்டால் அவர்கள் மீது ஏறி விழுந்து கடித்து குதறுகிறது.உயர் பதவியிலிருப்பவர்கள், செல்வம் படைத்த பெரிய மனிதர்கள், ஊழல் மற்றும் சுரண்டல்கள் மூலம் கோடிகோடியாய் குவித்த ஊழல் பேர்வளிகள், அதிகார மையங்களையே தங்கள் காலில் விழச்செய்யும் அழவிற்கு சர்வ வல்லமை பொருந்திய ஆன்மீக வாதிகள் இவர்கள் எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் சட்டம் அவர்களோடு சமபந்தியில் சங்கமித்திருக்கும்.

எங்கள் நாட்டில் இந்துமதத்தின் போப் ஆண்டவராக சித்தரிக்கப்பட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார்.பிரதமர், ஜனாதிபதி ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட இவரது காலடியில் விழுந்து ஆசிபெறுவதை ஒரு பாக்கியம் எனக் கருதுமளவிற்கு முக்கியமான ஒரு அதிகார மையமாக விளங்கியவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலுள்ள இவரது ஆசிரமத்தில் தவறுகள் நடப்பதாகவும் ஆகம விதிகளுக்கு விரோதமாக சங்கராச்சாரியார் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் சங்கரராமன் என்ற ஆசிரம ஊழியர் புகார்களை எழுதிக் குவித்தார்,
ஒருநாள் சங்கர்ராமன் காஞ்சிபுரம் கோயில் வளாகத்தில் வைத்தே பட்டப்பகலில் ஒரு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.விசாரணையில் சங்கராச்சாரியார்தான் சங்கரராமனை கொலை செய்த்தாக கூறிய காவல்துறை அவர் மேல் வழக்கு பதிவு செய்து அவரை சிறைக்கும் அனுப்பியது.

ஆனால் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே எங்கள் மாகாணத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது.அதுவரை நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக சங்கராச்சாரியாருக்கு எதிராக சாட்சியமளித்த பலரும் தாங்கள் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்களை திடீரென மறுத்தனர். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியும் குழந்தைகளும் கூட தொடர் அச்சுறுத்தல்களால் பிறள் சாட்சிகளாயினர். சமிபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது சங்கராச்சாரியார் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் பெரிய ஆனமீக குருவாக இருந்த ஒரே காரணத்தால் சட்டம் அவரை நிரபராதியாக விடுதலை செய்தது. என்னதான் இருந்தாலும் இந்தியா ஒரு ஆன்மீக நாடல்லவா..?
அதே போன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேற்றிவாளன் என்ற இளைஞன் கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில் வேலூர் சிறையின் மரணக்கொட்டடியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கிறான்.

ராஜிவ்காந்தி படுகொலை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கான பேட்டரியை வாங்கித் தந்தான் என்பதுதான் இவன் மீதான குற்றச்சாட்டு.

நீண்ட நாட்களாக தான் ஒரு நிரபராதி என்று கூறிவரும் பேற்றிவாளன் ’கொலையாளிகள் ராஜிவை கொலை செய்யும் திட்டத்தோடு வந்திருக்கிறார்கள் என்பதையோ தான் வாங்கித்தந்த பேட்டரி மூலம்தான் வெடிகுண்டை வெடிக்கச்செய்யப்போகிறார்கள் என்பதையோ தான் அறிந்திருக்கவில்லை’ என்று கூறிவருகிறார்.

ஆனால் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி கொலையாளிகள் ராஜிவ் காந்தியை நெருங்குவதற்கு உதவியாக செயல்பட்டவர்கள் ராஜிவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான சில காங்கிரஸ் பிரபலங்கள்.
பாதுகாப்பு வலையங்களை தங்கள் உதவியோடு தாண்டி ராஜிவ் காந்தி அருகே வந்தம் அந்த நபர்கள் அவரை கொல்லும் நோக்கத்தில் தான் வருகிறார்கள் என்பது எப்படி அவர்களை அங்கு அழைத்துவந்த அந்த காங்கிரஸ் காரர்களுக்கு தெரியாதோ அதே போலத்தான் தான் வாங்கித்தந்த பேட்டரி ராஜிவ்காந்தியை கொல்ல பயன்படப் போகிறது என்ற உண்மை பேறறிவாளனுக்கும் தெரியாது.

ஆனால் கொல்லப்பட்டவர் நாட்டின் மிக முக்கியமான நபர் என்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததாலும் காவல்துறையும் விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றமும் ராஜிவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன் ராஜிவ் கொலைவழக்கில் பேறறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த சிபி ஐ புலனாய்வு அதிகாரி தியாகராஜன், பேற்றிவாளனின் வாக்குமூலத்தை தான் பதிவு செய்த போது அதில் சில தவறுகளை செய்து விட்டதாகவும் அதன் விளைவாகவே பேற்றிவாளனுக்கு மரண தண்டனை கிடைத்ததாகவும் பேற்றிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்று தான் கருதியவதால் அப்போது அவ்வாறு செய்ததாகவும் இப்பொது தனது மனசாட்சி உறுத்துவதாலேயே காலம் கடந்து உண்மையைக் கூறுவதாகவும்.. பேறறிவாளன் நிரபராதி என்றும் கூறியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஒரு இளைஞனை குற்றவாளி என தீர்ப்பு எழுதிய பிறகு அந்த தண்டனைக்கு காரணமான வாக்குமூலத்தை எழுதிய அதிகாரியே தான் தவறு செய்துவிட்டதாக கருத்து தெரிவித்த பின்னும் அந்த இளைஞன் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருப்பதுதான் இந்தியாவின் நீதி.
சென்னையை சார்ந்த சரவணபவன் குழுமம் இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகோபால் ஏற்கனவே இரு பெண்களை திருமணம் செய்த நிலையில் மூன்றாவதாக தனது நிறுவனத்தில் வேலைபார்த்த நிர்வாகி ஒருவரின் மகள் மீது காதல்கொண்டார்.

திருமணமான அந்த பெண்ணை பல வழிகளிலும் துன்புறுத்தியதோடு கடைசியில் அந்த பெண்னின் கணவனையும் கடத்திச் சென்று கொன்று புதைத்து விட்டார். இது புகாராகி பெரும் பரபரப்பான வழக்கானது அனாலும் ராஜகோபால் இப்போதும் ஒரு கம்பீரமான தொழில் அதிபராகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த சரவணபவன் நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளுக்கு போலியான ஆவணங்கள் மூலம் ஊழியர்களை வேலைக்கு எடுத்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் புகார் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த புகாரின் மீது சென்னை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது.

சென்னையில் கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ஓய்வில்லாமல் உழைக்கும் காவல் துறையினருக்கு காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் தாயுள்ளத்தோடு இலவச உணவு வழங்கி வருகிறது சரவணபவன்.

இங்கு கையேந்தாத காவலர்கள் மிகக் குறைவு. குறைந்த வருமானத்தில் வாயைக்காட்டி வயிற்றைக்கட்டி வாழும் ஏழைக்காவலர்களுக்கு உணவு வழங்கும் சரவண பவன் நிர்வாகத்தின் மீது கொஞசம் கூட நன்றி விசுவாசமே இல்லாமல் நடவடிக்கை எடுக்கக் கோருவது எந்த வகையில் நியாயம்.. அப்படி சரவணபவன் மேல் நடவடிக்கை எடுக்க அந்த அளவிற்கு நன்றி கெட்டவர்களா எங்கள் காவல் துறையினர்.

மேக்டோனல்ஸும் கெ எஃப் சி யும் உங்கள் ஊரில் ஒரு போலீசுக்கு ஒரு துண்டு பர்கர் பீசாவது இலவசமாய் குடுத்திருக்குமா..?

எங்கள் ஊரில் காவலர்களுக்கு வயிறார உணவு வழங்கும் சரவணபவன் மீது புகார் கொடுக்கவேண்டும் என்ற கொடிய எண்ணம் உங்களுக்கு வந்தது..?

சமிபத்தில் முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி வெங்கடேசன் என்பவர் வீட்டில் முருங்கைக் கீரை பறித்ததாக இரண்டு கூலித் தொழிலாளிகளை கைது செய்து சிறைக்கு அனுப்பிய எங்கள் ஸ்காட்லாண்ட் யார்ட் கனிம வழங்கள் கொட்டிக்கிடக்கும் கடற்கரைகள் காடுகள் மலைகள் ஆறுகள் என்று நாட்டையே கபளீகரம் செய்து கொண்டிருக்கும் மாபியாக்களுக்குமுன் மௌனமாய் கைக்கட்டி நிற்கிறது.

இத்தனைக்கும் முருங்கைக்கீரை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி வெங்கடேசனின் வீடே பொது இடத்தை அபகரித்து கட்டப்பட்டிருபாதாக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை ஏற்கனவே குற்றம் சாட்டியிருக்கிறது.

அரசு நிலத்தை அபகரித்து கட்டப்பட்ட அந்த அந்த வீட்டில் முருங்கைக் கீரை பறித்த இரண்டு அன்றாடம் காய்ச்சிகளை ஏதோ தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் ரேஞ்சுக்கு சுற்றிவளைத்து சிறைக்கு அனுப்பிய எங்கள் காவல்துறை மும்பை குண்டுவெடிப்போடு தொடர்புடையதாக கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருக்கும் சஞ்சை தத்துக்கு மாலை நேரங்களில் மது விருந்து கொடுத்து அவர் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால் எங்கள் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் சட்டம் சொல்லும் நீதி. ஆனால் சட்டம் இயற்றும் அமைச்சர்கள் துவங்கி திகாரமையங்களிலிருக்கும் பலரும் பல தாரங்களுடன் வாழ்பவர்கள். இவர்களின் இரண்டாம் மனைவிகள் அரசியலில் பலம் பொருந்திய அதிகார மையங்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை இந்த அதிகார மையங்களுக்கு சல்யூட் அடித்து நிற்கின்றன.

முதல் மனைவி இரண்டாவது மனைவி பிரித்துப் பாராமல் எல்லோரையும் சமமாக பாவிப்பதுதானே எங்கள் கலாச்சாரத்தின் இயல்பு.

சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மாகாணத்தில் அப்போதும் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசாங்க சொத்தை தன்பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்து வந்த அரசு அவர்மேல் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. விசாரணையின்போது குறிப்பிட்ட சொத்துக்கான பத்திரப்பதிவு ஆவணங்களில் இருப்பது தனது கையெழுத்தே அல்ல என்று வாதிட்டார்.

பல ஆண்டுகளாக வழக்கு நடந்து தீர்ப்பு எழுதப்படும் வேளையில் மீண்டும் ஜெயலலிதா மீண்டும் எங்கள் மாகாண முதல் அமைச்சராகிவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும். தமிழ் நாட்டில் ஆளும் கட்சியினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து தீவைத்து கொழுத்தப்பட்டது மூன்று கல்லூரி மாணவிகள் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா தன் வசமிருந்த அரசுச் சொத்தை அரசிடமே திருப்பி தந்துவிடுவதாக தெரிவித்தார்.

அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுகொண்ட நீதிமன்றம், ‘ ஜெயலலிதா தான் வாங்கிய சர்ச்சைக்குரிய சொத்தை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் மேலும் அவர் ஒரு கையெழுத்தை, தன் கையெழுத்தே இல்லை என்று மறுத்துள்ளார். இதை அவரது மனசாட்சிக்கே விட்டு விட்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்.. என்று தீர்ப்பு எழுதியது.

ஒரு குற்றவாளியின் குற்றத்தை அவரது மனசாட்சியின் தீர்ப்புக்கே விட்டுவிடும் பெருந்தன்மை வாய்ந்த சிறப்பான நீதிமன்றங்கள் எங்கள் நாட்டில் ஈனமுன் ஏராளம் உள்ளன.

ஆகவே ஒரு சாதாரண வேலைக்காரியான சங்கீதாவுக்கு அநீதி இழைத்தார் என்பதற்காக எங்கள் இந்திய கலாச்சாரத்தின் வடிவமான தேவயானி கோப்ரகடே மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது என்பது தேவையற்ற விஷயம் என்றே கருதுகிறேன்.

வேண்டுமானால் தேவயானி கோப்ரகடே விஷயத்திலும் நீங்களும் உங்கள் சட்டமும் எங்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அணுகு முறையை பின்பற்றி தேவயானி கோப்ரகடேயையும் மனசாட்சியின்படி நடக்குமாறு அறிவுறுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

மேலும் உங்கள் காவலர்களால் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டபோது அவர் கிரிமினல்களோடு அடைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் அதை இந்திய நாடாளுமன்றம் கண்டித்ததாகவும் படித்தேன்.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்றே இதை நான் கருதுகிறேன் ஏனென்றால் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே முப்பத்து மூன்று சதவிகிதம் பேர் கிரிமினல்கள் என்று அதிகார பூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அதாவது சின்னச் குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்கும் பெரிய குற்றவாளிகளை நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவது எங்கள் நாட்டில் ஒரு நீண்டகால வாடிக்கை.
இந்த நடைமுறைகளை அமேரிக்காவும் கடை பிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.

இனி வரும் காலங்களிலாவது எமது இந்திய கலாச்சாரம் இறையாண்மை பண்பாடு போன்றவற்றை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.