Friday 8 January 2016




ஒரு லைன் ஹெட்லைன் ஆன கதை - 2
#######################################
ஒரு லைன் ஹெட்லைன் ஆன கதை - 1 ஐ படித்துவிட்டு ஒரு நண்பர் ஒருவர் கம்பனி ஆர்ட்டிஸ்டுகள் பற்றி விரிவாக இன்னொரு பதிவு போடுங்கண்ணே.. சூப்பர்.’ என்றார். இன்னொரு நண்பர் இதை அடிப்படையாக வைத்து திரைக்கதை ஒன்று எழுதுங்கள் என்றார்.
உண்மையில் அப்படி ஒரு திரைக் கதையை நான் ஏற்கனவே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
தொலைக்காட்சி ஒன்றில் ஜொலிக்கும் ஒரு தம்பி போன் போட்டு,
‘ஏண்ணே கம்பனி ஆர்டிஸ்டுகள் மானத்த இப்படி வாங்கிட்டீங்க.. நாங்கள்ளாம் இனி எப்படிண்ணே ஷோ நடத்துவோம்..’ என்று கேலியாகக் கேட்டார்.
அவருக்கு நான் சொன்னேன்
‘நான் எழுதியதை முதலில் கம்பனி ஆர்ட்டிஸ்டுகள் படித்திருக்க மாட்டார்கள்.. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை.. உங்கள் ஷோக்களில்வரும் கம்பனி ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கு இந்த டிவி விவாதங்கள் தன் தெருவிலும் கட்சியிலும் நண்பர்களிடத்திலும் ஏன் சிலருக்கு சொந்த வீட்டிலும் கூட கொஞ்சம் மரியாதையை ஏற்படுத்தியிருக்கக்கூடும். தெருவோர டீக்கடை விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டவர்கள் டிவி விவாதங்களில் வந்து அதன் சுகத்தை அனுபவித்த பிறகு, அவர்களுக்கு இதெல்லாம் எருமை மாட்டின் மீது விழுந்த ஒரு மழைத்துளிக்கு சமம்... இன்னும் சொல்லப்போனால், இந்த டிவி ஷோக்கள் எல்லாம் ஒருநாள் திடீரென நிறுத்தப்பட்டால், இப்போது புதிதாக களத்திற்கு வந்திருக்கும் சில ’கம்பனி ஆர்ட்டிஸ்டு’ களின் நிலமை ரொம்பவும் பரிதாபமாகிவிடும்.. அவர்கள் ஒரு வித மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். இன்னும் சிலர் தற்கொலைக்குக்கூட முயற்சிக்கும் அபாயம் இருக்கிறது... இதுவும் கிட்டத்தட்ட போதை பொருளுக்கு அடிமையாவதைப்போலத்தான்..!’ என்றேன்.
இது போக தற்போது பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் கம்பனி ஆர்டிஸ்ட்டாக பவனி வரும் ஒருவர் அடிக்கடி ’ராஜ்யசபா’ கனவிலும் திளைக்கிறாராம்..! என்கிறார் அவருக்கு நன்கு நெருக்கமான ஒரு நண்பர் ..?
இனி நம்ம கதைக்கு வருவோம்..!
அயோத்தியில் பாபரை அகற்றிவிட்டு, அதே இடத்தில், ராமரைக் கொணர முயற்சித்ததைப் போல, அதுவரை நியூஸ் எடிட்டராக இருந்த ஜலாலை அகற்றிவிட்டு, அந்த இடத்துக்கு பரோட்டாமாஸ்டரை நியூஸ் எடிட்டராக நியமித்தது ZEE தமிழ் நிர்வாகம்.
சாந்த சொரூபியாய் காட்சியளித்த பரோட்டா மாஸ்டரை பார்த்தாலே கும்பிடத் தோன்றும், அந்த அளவிற்கு எளியத் தோற்றம்.
இயல்பாக நடிக்கும் ஒரு குணச்சித்திர நடிகரைப் போலத்தான் முதலில் அறிமுகமானார் நம்ம பரோட்டா மாஸ்டர்.
இதற்கு முன்னர் அன்றைய எதிர் கட்சி டிவியில் கமாண்டர் ஆக இருந்ததாகவும், அதற்கு முன்னர் பிபிசி யின் டெல்லி அலுவலகத்தில் முக்கிய பதவியில் இருந்ததாகவும் அறிமுகப்படுத்தினார்கள்.
’வெல்கம் டு இந்தியா’ என்று வழக்கம் போல வாழ்த்திவிட்டு விடைபெற்றேன்.
மறுநாள், முதல் குரல் நிகழ்ச்சிக்கு என்ன பண்ணலாம் என்று சுதாங்கன் சாரிடம் விவாதித்தேன்.
அப்போது தமிழ் தேசியம் VS திராவிட இயக்கம் என்று ஆங்காங்கே கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருந்த நேரம். எனவே அது பற்றியே நாளைக்கு விவாதிப்போம் என்று முடிவெடுத்தோம்.
இதைப் பற்றி விவாதிக்க தமிழ் தேசிய பொது உடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசனை விருந்தினராக அழைக்கலாம் என முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அன்று சென்னைக்கு வருவதாக இருந்த அவரும் நிகழ்ச்சிக்கு வர ஒத்துக் கொண்டார்.
மாலையில் ஷூட்டிங்.
மதியம் போல நியூஸ் ரூம் பக்கமாக போய்க்கொண்டிருந்த என்னை அழைத்தார், புதிதாய் வந்த அந்த பரோட்டா மாஸ்டர்.
‘ஆமா இண்ணைக்கு என்ன சப்ஜக்ட்..?’
என்று கேட்ட அவரிடம் ‘தமிழ் தேசியம் திராவிட தேசியம் ஏன் இந்த முரண்பாடு..? இதுதான் சார் சப்ஜக்ட்..’ என்றேன்.
‘அப்படியா guest யாரு..?’ என்று மீண்டும் கேட்டார் மாஸ்டர்.
தன் ஆளுகைக்குள் என்னை கொண்டு வர முடிவெடுத்து விட்டார் என்பதை அடுத்த சில நொடிகளில் உணர்ந்து கொண்ட நான்,
‘பெ மணியரசன் தான் சார் guest ..’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள்.
’வேற யாரும் நல்ல guest கிடைக்கலையா..’ என்றார் மாஸ்டர்.
ஒரு படத்தில் ‘நான் போலிஸ் இல்ல, பொறுக்கி..’ என்று விக்ரம் சொல்வது போல ’நான் மாஸ்டர் இல்ல மடையன்’ என்று அந்த ஆள் சொல்வது போல எனக்கு மைண்ட் வாய்ஸ் கேட்டது.!
உள்ளுக்குள் ஒரு முறை சிரித்துக் கொண்டு,
‘சார் பெ.மணியரசன் தான் இந்த சப்ஜெக்டுக்கு பொருத்தமான ஆள்... இந்த சப்ஜெக்ட்டுக்கு இவரைவிட பொருத்தமான ஆட்கள் இல்லை..’ என்றேன்.
என் பதிலில் திருப்தி அடையாத மாஸ்டர் கொஞ்சம் நக்கலான குரலில்
‘பெ மணியரசன் நான் கேள்விப்பட்ட பெயராவே இல்லையே..?’ என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு கடுப்பு தலைக்கு ஏறியது ‘சார் உங்களுக்கு தெரியலைனா பரவாயில்லை எனக்கு தெரிஞ்சிருக்கு.. அது போதும்.. மணியரசன் எதையும் சித்தாந்தமாக அணுகக் கூடியவர். வழக்கறிஞர், நீண்ட நாட்களாக தமிழ் தேசிய பொது உடமைக் கட்சி என்ற ஒரு அமைப்பை நடத்தி வருபவர்.வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழ் தேசியம் பேசும் நபர் அவரல்ல..’ என்றேன் வழக்கத்தைவிட கொஞ்சம் குரலை ஏற்றியவாறு.
மாஸ்டருக்கோ ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. அது இல்லாத மீசைக்கு மேல் கொஞ்சம் எகிறிக் குதித்தாலும் கொஞ்சம் அடக்கிய குரலில்
‘மணியரசன்னு ஒரு ஆளே இல்ல அப்படி ஒரு ஆள யாருக்குமே தெரியாது .. ’ என்றார். எனக்கோ கோபம் உச்சந் தலைக்கு ஏறியது
‘சார் மணியரசன்னு ஒரு ஆள உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுங்க.. அது உங்களோட அறியாமை. அதுக்காக அப்படி ஒரு ஆளே இல்ல, யாருக்குமே தெரியாதுன்னு சொல்லாதீங்க ... உங்களுக்கு தெரியலைனா அது யாருக்குமே தெரியாதுங்றது முட்டாள் தனம்..’ என்றேன்.
என்னை எதிர் கொள்ள முடியாத அவர் வேகமாக் ஒரு நாலைந்து அடி பின்நோக்கி நகர்ந்து போய், தானுண்டு தன் வேலையுண்டு என்று ஏதோ டைப் செய்து கொண்டிருந்த அப்பாவி சேகர் என்ற டைப்பிஸ்டை உலுக்கி ‘ஏம்பா உனக்கு மணியரசனை தெரியுமா...?’ என்று கேட்க ஏற்கனவே எங்கள் மோதலை தலை குனிந்தவாறு கவனித்துக் கொண்டிருந்த சேகர் பயந்து போய், மாஸ்ட்ரை’ப் பார்த்து ‘தெரியாது..?’ சார் என்றான்.
அவ்வளவுதான்… மாஸ்டர் முகத்தில் பத்தாயிரம் வாட்ஸ் மின்சாரத்தின் பிரகாசம்.
‘பாத்தீங்களா இவருக்கே மணியரசன் யாருண்ணு தெரியலை..?’ என்றார் வெற்றிப் பெருமிதத்தோடு.
அவ்வளவுதான். என் பொறுமை(!) அணை உடைய, ஆத்திரம் ஆறானது. ”..யோவ் உன்னைய எவன்யா நியூஸ் எடிட்டரா வேலைக்கு எடுத்தான் .கூமுட்ட.. ஒன்னைய மாதிரி முட்டாள்கள நியூஸ் எடிட்டரா எடுத்தா, இந்த கம்பெனி வெளங்குமா..? உனக்கு தெரியாதுண்ணா உலகத்துக்கே தெரியாது’ண்ணு நெனக்கிற நீயெல்லாம் எப்படிய்யா இந்த வேலைக்கு வந்தே? அந்த அப்பாவிப் பையன்ட்ட போய் மணியரசனை தெரியுமாண்ணு கேக்குறியே .. அவங்கிட்ட இப்ப ‘ஒபாமாவுக்கும் ஒசாமாவுக்கும் என்ன வித்தியாசம்’ங்கிறத இப்ப கேளு அவன் என்ன சொல்றாம்ணு பாப்போம்..?’ என்று உச்ச ஸ்தாதியில் கத்த ஆரம்பித்தேன்.
மொத்த ஆபீசும் அரண்டு போய் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது குரல் கேட்டு, எடிட் ஷூட்டிலிருந்த ஆஜானுபாகுவான தம்பி ராஜி ஓடி வந்து என்னைப் பிடித்து ‘அண்ணே வாங்கண்ணே ...இதெல்லாம் இப்படித்தாண்ணே இருக்கும்... வாங்க ..’ என்று என்னை இழுத்துக் கொண்டு போய் விட்டான்.
அன்று மாலை பெ.மணியரசன் வந்தார். ஷோவும் ஒளிபரப்பானது.
எல்லாம் ’எனக்குத் தெரியும்… ’ என்ற ஆணவம் இருந்த அளவிற்கு மாஸ்டரிடம் ‘ஆவணங்கள்’ இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது..
மறுநாள் என்னை பார்த்த மாஸ்டர் கொஞ்சம் வழிந்தபடி, “ என்ன சார் நேத்து ரெம்ப சூடாயிட்டீங்க ..?’ என்று கூலாகக் கேட்டார்.
‘ஸார், மணியரசங்கிற ஆளை உங்களுக்கு தெரியாதது தப்பில்ல.. அது உங்களோட அறியாமை. ஆனா அப்படி ஒரு ஆளே இல்லைணு நீங்க நிருபிக்க முயற்சி செய்தது முட்டாள்தனம்.. இதுக்கு சூடாகாம என்ன சார் பண்ண முடியும்? இனிமே இப்படியெல்லாம் நான்சென்சா பேசாதீங்க..?’ என்று அவருக்கு என்னால் முடிந்த ஒரு அட்வைசை கொடுத்து விட்டு அத்தோடு விட்டு விட்டேன்.
ஆனால் இப்படி ஒரு முட்டாளை ஒரு கார்பரேட் கம்பனி லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளத்துக்கு எப்படி எடுத்தது என்ற புலன் விசாரணையை ஆரம்பித்த போதுதான் அந்த ‘பரோட்டா சுட்ட கதை’ தெரிய வந்தது.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியிலுள்ள (BBC) பிபிசி அலுவலக லைப்ரரியில் ஒரு அசிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார் நம்ம மாஸ்டர்.
அங்கு அன்றாடம் வரும் செய்தித் தாள்களில் வரும் செய்திகளை தரம் வாரியாக பிரித்து வெட்டி ஒரு ஃபைலில் ஒட்டி வைப்பதுதான் அண்ணனின் அன்றாட பணி.
உதாரணமாக 2 ஜி என்ற ஃபோல்டரில் அது சம்மந்தமாக வரும் செய்திகளை ஒட்ட வேண்டும், தேமுதிக என்றால் அது சம்மந்தமான தகவல்களை வெட்டி ஒட்ட வேண்டும். அதாவது பிற் காலத்தில் பிபிசி செய்தியாளர் ஒருவருக்கோ சப் எடிட்டர் ஒருவருக்கோ தேமுதிக பற்றி ஒரு குறிப்பு தேவை என்றால் இந்த ஃபோல்டரை எடுத்துப் பார்த்தால் போதும். அவரது வேலை சுலபமாகிவிடும்.
இப்படி வெட்டி ஒட்டும் வேலையை செய்து கொண்டிருந்த மாஸ்டருக்கு அந்த வேலை போரடிக்க தன் தகுதிக்கும் திறமைக்கும் பொருத்தமான இடம் சென்னைதான் என்ற முடிவுக்கு வந்த மாஸ்டர் அங்கிருந்த படியே சென்னை சேனல்களுக்கு வலை வீசுகிறார்.
அவரது வலையில் முதலில் சிக்கியது ஜெயாடிவி, பிபிசியிலிருந்தே ஒருவர் நம்மிடம் வேலை கேட்கிறார் என்பதை ஒரு பெருமையாக நினைத்த ஜெயா உடனே இரு கரம் கூப்பி அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டது..!
அவ்வளவுதான்… ‘பிபிசியில் இருந்தார்... இப்ப ஜெயா டிவியில இருக்கார் இப்ப அவரை நம்ம டிவிக்கு எடுப்போம் என்று நினைத்த ZEE தமிழ் நிர்வாகம் அவரை நியூஸ் எடிட்டராகவே எடுத்து விட்டது.
இவர் வந்து கொஞ்ச நாளிலேயே ZEE தமிழ், செய்திப் பிரிவையே மூடி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியது.!
அப்போதுதான் பல தலைமுறைகளாக மீடியாவில் கோலோச்சியவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய சிந்தனைகளோடு அந்த டிவி வெளிவர ஆரம்பித்திருந்த நேரம்.
அந்த சேனலில் சர்க்கரைவாசன் என்ற ஒரு இனிமையான மனிதர் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு நண்பரான சந்தோஷ் என்கிற ஒருவர் நம்ம மாஸ்டருக்கும் பழக்கம்.
வேலையில்லாத நிலைமையில் சந்தோஷை அணுகிய மாஸ்டர், சர்க்கரை யை தனக்கு அறிமுகப்படுத்தும்படி பல நாள் நச்சரிக்க, கடைசியில் ஒரு நாள் தொல்லை தாங்காமல், சர்க்கரை வாசனிடம் நமது மாஸ்டரை அழைத்துப் போய், அவருக்கு ஒரு வேலை வழங்கும்படி அறிமுகப்படுத்தினார் சந்தோஷ்.
‘பிபிசி யில் சுட்டார்.. ஜெயாவில் சுட்டார் பின்னர் ZEE தமிழிலும் சுட்டார்’ ,என்று தோற்றத்திலும்ல் அசத்திய மாஸ்டரின் ’சுட்ட கதைகளை’க் கேட்ட சர்க்கரை வாசன் அவரை முக்கிய பொறுப்பு ஒன்றிற்கு எடுத்துக் கொண்டார்..!
அதன்பிறகு சந்தோஷ் சிரிக்கவே இல்லை.
‘இந்த ஆளை எனக்கு ஏன் அறிமுகப்படுத்தினே?” என்று சர்க்கரைவாசன் சந்தோஷை கேட்கும் படிக்கு நிலமை சில நாட்களிலேயே தலைகீழானது.
மாஸ்டரின் அரசியல் சாதுர்யத்தில், சர்க்கரை வாசன் சேனலிருந்து வெளியேற அந்த கம்பனியில் ஃபீல்ட் மார்ஷலாகவே ஆகி விட்டார் நம்ம பரோட்டா மாஸ்டர்.
தற்போது கால ஓட்டத்தில் மாஸ்டரின் ‘ சுட்ட கதைகள்’ கம்பனியில் பரவலாக எல்லோருக்கும் தெரிய வர, ஆரம்பத்தில் கிடைத்த அந்த மரியாதை இப்போது அவருக்கு அங்கு இல்லை..!
கொடுத்த ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தை திருப்பி வாங்கவும் கம்பனிக்கு ஒரு தயக்கம். ஏனென்றால் நிறுவனத்தை நிர்வாகம் செய்பவர் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர். மனசாட்சிக்கு மட்டுமே மரியாதை தருபவர்.. எவரையும் புண் படுத்த விரும்பாதவர்..!
இதற்கிடையில் ஒருநாள் கம்பனியிலிருந்து கோபித்துக் கொண்டு போனார் நம்ம பரோட்டா மாஸ்டர். போனவர் திரும்ப வர மாட்டார் என்று எல்லோரும் நினைத்திருக்க,..
சமீபத்தைய வெள்ளப் பெருக்கில், அடையாற்றின் கரைகளைத் தாண்டி அந்த டிவி க்குள்ளும் புகுந்த வெள்ளம் கூடவே கொஞ்சம் குப்பைக் கூளங்களையும் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து சேர்த்திருந்தது...?
தண்ணீர் வடிந்து, அலுவலகத்தை சுத்தம் செய்த பிறகு பார்த்தால், நம்ம பரோட்டா மாஸ்டர் அங்கே மீண்டும் உட்கார்ந்திருந்தார்...!
’இது மழை செய்த பிழை’ என்கிறார்கள் நண்பர்கள்..!
இது தான் ’ஒரு லைன் ஹெட் லைன் ஆன கதை ’
(பிகு: மேற் குறிப்பிட்ட நியூஸ் சேனலில் சீப் நியூஸ் எடிட்டராக இருக்கும் பரோட்டா மாஸ்டரின் மாதச்சம்பளம் இன்றைய தேதியில் கிட்டத்தட்ட மூன்றரை லட்ச ரூபாய்..
இது ஒரு புறமிருக்க ஊடகத் துறைமீது காதல் கொண்டு இளம் வயதிலிருந்தே மானா மதுரை ஜலால் என்ற பெயரில் எழுத ஆரம்பித்து. ZEE தமிழ் தொலைக்காட்சியில் நியூஸ் எடிட்டராக இருந்த, நேர்மையும், திறமையும் , தகுதியும் ஒருங்கே அமையப்பெற்ற ஜலால் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதும், தற்போது தான் செய்யும் வேலையைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதும் ஊடகத்துறையை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியவைக்கும் விஷயமாகும்.)
(தொடரும்)


‘ஒரு லைன் ஹெட் லைன் ஆன கதை..?’
########################################################
தகுதி உடையோர் தயங்கி நிற்க
அறைகுறை தகுதிகளுடனும், ஆர்ப்பாட்ட அலங்காரங்களுடனும் வளையவருபவர்கள் இன்று ஊடகத் தளங்களெங்கும் ஊடுருவி நிற்பதைக் காண முடிகிறது..?
தங்களிடம் இல்லாத தகுதிகளை இருப்பதாய்க் காட்டி,
பொய்களை போர்த்தி ,
போலியாய் நடித்து புறப்பட்டு வந்த ஒரு கூட்டம்
இன்று ஊடக பரப்பெங்கும் ஊடுருவியிருப்பதைக் காணமுடிகிறது..!
ஒரு வழியாக ஊடக உலகுக்குள் நுழைந்த பிறகாவது இவர்கள்
தங்கள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளாமல்,
கூடு விட்டு கூடு தாவுவதைப் போல அடுத்தடுத்து கம்பெனிகள் பல தாவி, கால ஓட்டத்தில் தானும் ஓடி , சில ஊடக சாம்ராஜ்யங்களில் தலைமை பதவிகளுக்கே வந்து விடுகிறார்கள்.
இவ்வாறு கூடு விட்டு கூடு தாண்டி கடைசியில் ஒரு புகழ்பெற்ற ஊடகத்தில் குயில் முட்டையாக தன்னைக் காட்டிக் கொண்ட ஒரு ’கூமுட்டை’ ஒன்றை பற்றிய பதிவுதான் இது.
‘ஃபீல்ட் மார்ஷலான பரோட்டா மாஸ்டர்..’!
##################################################
அதாவது பிரபலமான ஒரு நகைச்சுவைக் காட்சி அது
மிலிட்டரியில் இருந்து வரும் ஒரு நபர்
’நான் அங்க சுட்டேன்.. இங்க .. சுட்டேன்.’
என்று தான் சுட்ட கதைகளை அடுக்கிக் கொண்டே போவார்...!
அவர் கொடுத்த ’பில்டப்களை’க் கேட்டு எதோ பெரிய ஆர்மி கமாண்டர் போல’ என நினைத்து..
கடைசியில் பார்த்தால் அவர் அங்கு ஆர்மி கேண்டீனில் பரோட்டா சுட்டுக்கொண்டிருந்த ரகசியம் வெளியே வரும் .உண்மையில் ஒரு பரோட்டா மாஸ்டராக இருந்த அவர் தான் பரோட்டா சுட்ட கதையைத்தான் ‘நான்.. அங்க சுட்டேன் இங்க சுட்டேன்’? என்று பெருமை பொங்க சொல்லியிருப்பார்.!
தோற்றத்திலும் ஒரு எ டி எம் வாட்ச் மேனாகக் கூட இருக்கத் தகுதியில்லாத அந்த மனிதருக்கு, ராணுவத்தின் அதி உயர் கௌரவமான உலகம் போற்றும் ’ஃபீல்ட் மார்ஷல்’ பட்டத்தை வழங்கினால் எப்படி இருக்கும்..?
அப்படித்தான் ஒரு டெல்லியில் ஒரு ‘ரெஸ்டாரண்டில்’ பரோட்டா சுட்டுக் கொண்டிருந்த ஒரு மாஸ்டர் ஒருவர் இங்கு ஃபீல்ட் மார்ஷல் ஆகியிருக்கிறார்..!.
தகுதியே இல்லாத ஒரு நபர் தலைமை செய்தி ஆசிரியர் ஆன கதை தான் இந்த ‘ஃபீல்ட் மார்ஷலான பரோட்டா மாஸ்டர்..’!
ஒருவர் வேலைக்கு வரும் போது, அவருக்கு நாலு வரி நல்ல படியாக எழுத வருகிறதா..?
குறைந்த பட்ச உலக ஞானமாவது இருக்கிறதா என்று பார்க்காமல் ‘அங்க இருந்தார்’ ‘இங்க இருந்தார்’ என்பதையே பிரதான அடிப்படைத் தகுதிகளாகக் கொண்டு வேலைக்கு எடுக்கும் வரைக்கும், இத்தகைய பரோட்டா மாஸ்டர்கள் ஃபீல்ட் மார்ஷல்கள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்பது ஒரு கசப்பான நிஜமாகும்..!
ஆனால் தற்போது நாகரீகம் கருதியும் சம்பந்தப்பட்ட நபர் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் கோலோச்சுவதாலும் ‘ஃபீல்ட் மார்ஷலான பரோட்டா மாஸ்டர்..’ என்ற டைட்டிலை சூழலுக்கு பொருந்தும் படியாக ‘ஒரு லைன் ஹெட் லைன் ஆன கதை’ என்று கொஞ்சம் கௌரவமாக மாற்றிருக்கிறேன்..?
இனி விஷயத்துக்கு வருவோம்
சன் நியூஸ் சேனலில் நியூஸ் எடிட்டர் டெசிகனேஷனில் புரோக்ராம் ஹெட் என்ற பொறுப்பில் இருந்து விலகியதும், என் அபிமான சந்துரு சார் அழைப்பின் பேரில் Zee தமிழ் சேனலில் வந்து சேர்ந்தேன்..!
பெரிய டெசிகனேஷன் எதற்கும் ஆசைப்படாமல் என் தகுதிகள் எதையும் ’ஹைலைட்’ பண்ணாமல் மிக சாதாரணமான ஒரு மானேஜர் டெசிகனேசனுக்கு இணையான சீனியர் சப் எடிட்டர் என்ற பொறுப்பில் வேலைக்கு சேர்ந்தேன்...?
எனக்கு பொறுப்பு பதவி இவை எதைப்பற்றியும் கவலை இல்லை.!
அங்கு நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே இதற்கு முன்பு வேலைபார்த்த நிறுவனங்களில் என்னைவிட பாதி அளவிற்கு குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த பலரும் இங்கு என்னைவிட ஒரு மடங்கு,ஒன்றரை மடங்கு அதிகமாக ஊதியம் பெறுவதை கவனித்தேன்.இது எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை மாறாக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இத்தனைக்கும் சந்துருவின் வலது கரம் நான் என்றும், நான் சொல்பவர்களுக்குதான் அங்கு வேலை கிடைக்கிறது என்றும், பலரும் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருந்த நேரம்.
மீடியா ஜாம்பவான்கள் முதல் சாதாரண பாமர கத்துக் குட்டிகள் வரை எனது மெயில் ஐடிக்கு தங்கள் ரெசியூம்களை அனுப்பிக் கொண்டிருக்க எனக்கு முப்பத்தையாயிரம்தான் சம்பளம்..!
இத்தனைக்கும் நான் பரிந்துரைத்து வேலைக்கு எடுத்த சில ஆட்கள் என்னைவிட அதிகமாக சம்பளம் வாங்க எனக்கு ஏன் குறைவான சம்பளம் என்று எனக்கு விளங்கைல்லை..?
இது போக சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் பாடிக் கொண்டிருந்த விஜயசாரதியிடம் சந்துரு சேனல் ஹெட்டாக வந்திருக்கிறார் போய் பார். என்று நான் சொல்ல... கொஞசம் தயக்கத்தோடு இருந்தவரை சந்துருவை பார்கக வைத்ததும்.. அதே விதமான ஒரு தயக்கத்துடன் அலட்சியமாக இருந்த ஜென்ராமிற்கு அடுத்தடுத்து போன்களை போட்டு சந்துருவை பார்க்க கிளப்பி விட்டவனும் நானே..?
இதற்கெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் ’மாயாண்டி குடும்பத்தார்’ போல ஒன்றாக இணைந்திருப்போமே என்ற அல்ப ஆசைதான் காரணம்..!
அவர்களுக்கெல்லாம் கை நிறைய சமளம்,
அதிலும் விஜய சாரதியின் சம்பளம் கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்சரூபாய்.. விஜய சாரதி அதற்கு தகுதியானவர். என்பது வேறு விஷயம்..!.
இந்த சூழலில் ஒருநாள் சந்துரு சாரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு ’அவர் ஏற்கனவே வாங்கின சம்பளத்தை விட பல மடங்கு அதிகமான சம்பளத்தை பிக்ஸ் பண்ணியிருக்கும் நீங்கள் எனக்கு மட்டும் ஏன் இப்படி செய்தீர்கள்..?’ என்று வழக்கம் போல நியாயம் கேட்டேன்.
சந்துரு சார் சிரித்துக் கொண்டே சொன்னார்,
‘சம்பள விஷயத்திலெல்லாம் நான் தலையிடல. அது எச் ஆர் முடிவு பண்றது... ஆனா நான் இது பத்தி காமேஷ் கிட்ட கேட்டேன். நீ... சொல்ற நபர் பழைய இடத்தில் ஐம்பதாயிரம் வாங்கியதாக சொல்லியிருக்கிறார்.. .. அதனால் அதிகமா பிக்ஸ் பண்ணினாங்க .. நீ ஏற்கனவே வாங்கின உண்மையான சம்பளத்த சொன்னதோட, சேலரி சர்டிபிகேட்டையும் அட்டாச் பண்ணியிருக்க .. இது ஒரு கார்ப்பரேட் புரிஞ்சுக்க..’? என்றார்.
உண்மையில் நான் எனது சன் டிவி சேலரி சிலிப்பையெல்லாம் எச் ஆரிடம் கொடுத்திருந்தேன்.ஆனால் வேறு சில டிவிக்களில் இருந்து வந்தவர்கள் ‘எங்களுக்கு சேலரி ஸ்லிப் எல்லாம் கிடையாது ஏண்ணா அது ஒரு SLAVERY கம்பனி ‘ என்று சொல்லி விட்டார்கள்.
#####
இவ்வாறாக நான் Zee தமிழில் என் பயணம் தொடங்க,…
இருபெரும் ஊடகவியலாளர்களை வைத்து நாள் தோறும் காலையில் ஒளிபரப்பாகும் ’முதல்குரல்’ என்ற அன்றாட அரசியல் விவாத நிகழ்ச்சிக்கு நான் தான் பொறுப்பு.
பத்திரிகையாளர்கள் இருவருக்குள்ளும் பொருத்தம் என்றால் அப்படி பொருத்தம்!
இரு பத்திரிகையாளர்களில் ஒருவர் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்’ என்றால் இன்னொருவர் ‘கொட்டை தின்று பழத்தை போட்டவர்’.
(அதாவது ’அவர் பழத்தை தின்றால் நான் கொட்டையைத்தான் தின்பேன்’ என்பது இன்னொருவரின் பிடிவாதம்..!)
அப்படி, ஆங்கர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு ஒரு ஏழாம் பொருத்தம்..!
இத்தனைக்கும் கொட்டையை கொட்டகைக்கு அழைத்து வந்தவரே இந்த பழம் தான். ஆனாலும் பழம் வரும் பாதையில் பழத்தோல்களை வீசி அவரை வழுக்கி விழ வைப்பதில் கொட்டைக்கு அப்படி ஒரு பேரானந்தம்!
வருகிற விருந்தினர்கள் பேசி முடிப்பதற்குள், கொட்டை, முந்திரி கொட்டையாகி, தன் குரலையே ‘முதல்குரலாக’ எடுத்து அடுத்தடுத்து கேள்விக் கணைகளை வீசக் கொண்டிருக்க.. பழம் பரிதாபமாக காட்சியளித்துக் கொண்டிருப்பார்.
சில நாட்கள் ’கடைசி குரல்’ கூட அவருக்கு கிடைக்காது..?
பழத்தைப் பொறுத்த மட்டில், அவர் நீண்ட அனுபவமுள்ள பத்திரிகையாளர். ஆனால் கொட்டையோ கொஞ்சம் படபடப்பானவர் .ஒரு வெற்றிகரமான டிவி ஆங்கருக்கான இயல்பான நிலை ஒரு போதும் அவரிடம் இருக்காது.
பால்யகால கேமிரா பயம்,
பள்ளிக்கூட குரூப் போட்டோவில் ஆரம்பித்த அந்த பயம்,
இன்னும் விடாமல் அவர் கழுத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது.!
’நீங்கள் தயவு செய்து ஆங்கர் பண்ண வேண்டாம் ’ என்று நிர்வாகம் சொன்னதும் ஒரு நாள் ஆங்கர் ஆங்கிரி ஆகி விட்டார்..
நானும் ஆங்கர் பண்ணுவேன் என்று அடம் பிடித்து ஷோவில் வந்து உட்கார்ந்து விட்ட அவர்
எப்போதுமே ஒரு இறுக்கமான சூழலிலேயே இப்பார்.
அவரிடம் நாங்கள் எல்லோரும் ‘சார் ஷோவில் கொஞ்சம் சிரியுங்கள்.. அப்பதான் நல்லா இருக்கும் ..’ என்று ஆளுக்கு ஆள் அட்வைஸ் கொடுத்துப் பார்த்தோம்.
அதன் விளைவு இன்னும் கொடூரமாக இருந்தது ..?
காங்கிரஸ் கட்சியின் ஜோதி ராமலிங்கம்
‘இந்த நாட்டிற்காக இலங்கைத் தமிழர் நலனுக்காக மாபெரும் தியாகத்தை செய்தவர்கள் நாங்கள்... இந்திய நாட்டைக்காக்க அன்னை இந்திராவை துளைத்துச் சென்ற தோட்டாக்களுக்கு பலி கொடுத்தோம்.. அவர்தம் அருந்தவப் புதல்வர் ராஜிவ் காந்தியை, கொடுஞ்சதிக் காரர்களின் மனித வெடிக்குண்டுக்கு பறிகொடுத்தோம்..’ என்று உணர்ச்சி வசப்பட்டுக் தம்பிடித்து கண் கலங்கிக் கொண்டிருக்கும் போது...
நம்ம ‘கொட்டை’ க்ளோசப்பில் சிரித்துக் கொண்டிருப்பார்.!
அதன்பிறகு ஒரு நாள் தம்பி ராஜி ’சார் அடிக்கடி சிரிக்காதீங்க சார்.. நல்லா இல்ல.. அதுவும் செயற்கையா இருக்கு..?’ என்று நேரடியாகவே சொல்லி விட, கொட்டைக்கு கோபம் வந்து விட்டது.!
கொஞ்ச நாள் அவர் ராஜியுடன் பேசவேயில்லை..!
இந்த நிகழ்ச்சியில் எனக்கு அடுத்த தயாரிப்பாளராக இருந்தவன் தம்பி பாரி.
பெரும்பாலும் மிக முக்கியமான தலைவர்கள் அல்லது வித்தியாசமான மனிதர்கள், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி போன்ற வெளிநாட்டு பிரபலங்கள், அறிஞர்கள், விடுதலைப்புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று என் ரசனைக்கு ஏற்ற விருந்தினர்களை மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைப்பதும் அதை ஷூட் பண்ணும் போதும் மட்டுமே நான் ஸ்டுடியோவிற்குள் இருப்பேன்.
மற்ற நாட்களில் ஷூட் ஆரம்பித்ததும் பாரியிடம் பொறுப்பை கொடுத்து விட்டு வெளியே வந்து இந்திரசேனா ரூமில் உட்கார்ந்து விடுவேன்.
இப்படி பலநாட்கள் தொடர்ந்ததால் பாரி தன் தேரை தன் சொந்த ரூட்டிலேயே ஓட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான் ..!
சில நேரங்களில் ஷூட்டிங் நேரம் நெருங்கும் போது, நாம் அழைத்திருந்த விருந்தினர் வராமல் போய் விடுவதும் அதனால் கொஞ்சம் டென்ஷன் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகவே இருந்து வந்தது.
பொதுவாக சினிமா, நாடக கம்பனிகளில் ’ ‘எப்ப கூப்பிட்டாலும் நடிக்க வரணும்’ என்ற அடிப்படையில் நிலைய வித்வான்களாக ‘கம்பனி ஆர்ட்டிஸ்ட்’ என்று சிலரை வைத்திருப்பார்கள். அதே போன்று வர வேண்டிய விருந்தினர் திடீரென்று வர முடியாது போனால் அவசரத்துக்கு அழைப்பதற்கென்று நாங்களும் ஒரு நீண்ட ‘கம்பனி ஆர்டிஸ்ட்’ லிஸ்டே வைத்திருந்தோம்..!
(எல்லாம் சத்குரு விசி பாரதி என்ற சந்திரசேகரசுவாமிகளிடம் கற்ற வித்தைகளில் இதுவும் ஒன்று!)
ஒரு வித்தியாசம் என்னவென்றால் சினிமா மற்றும் நாடக கம்பனிகளில் நிலைய வித்வான்களுக்கு தாங்கள் ’ஒரு கம்பனி ஆர்டிஸ்ட்’ என்பதும் தங்கள் லெவல் என்ன என்பதும் நன்றாகவேத் தெரியும்.
ஆனால் நம்ம கம்பனி ஆர்டிஸ்ட்டுகளுக்கு, தாங்கள் ஒரு கம்பனி ஆர்டிஸ்ட் என்பதும் வேறு ஆள் கிடைக்காததால்தான் நம்மை அடிக்கடி கூப்பிடுகிறார்கள் என்பதும் கடைசிவரை தெரியாது.
ஏதோ தங்கள் நாவன்மைக்கும் அரசியல் சாதுர்யங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக நினைத்து புளகாங்கிதம் அடைந்து கொள்வார்கள்.
பெரும்பாலும் பெரிய அளவில் செல்வாக்கில்லாத அரசியல் கட்சிகளின் இரண்டாம் மூன்றாம் கட்ட ஆட்களைத்தான், நாங்கள் இப்படியான கம்பனி ஆர்ட்டிஸ்ட் லிஸ்டில் வைத்திருப்பது வழக்கம்.ஏனென்றால் அவர்கள்தான் திறந்துவிட்ட செம்பரம் பாக்கம் தண்ணீர் போல அழைத்தவுடன் ஓடோடி வருவார்கள்..!
‘தம்பி பாரிதான் எங்க டீமில் கம்பனி ஆர்ட்டிஸ்ட் ஏஜன்ட்!’
நாங்கள் ஏற்பாடு செய்த விருந்தினர் வரத் தவறும் பட்சத்தில் அல்லது கடைசி நிமிஷம் வரை உருப்படியான விருந்தினர் எவரும் பிக்ஸ் ஆகாத நிலையில் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு சில பல நிமிடங்களுக்கு முன்பு பாரியை பார்த்து
‘பாரி கம்பனி ஆர்டிஸ்ட் யாரைவாவது கூப்பிடு என்பேன்..?’
‘அண்ணே நம்ம இசையை கூப்பிடுவோமா...?; என்பான் பாரி.
உடனே கூப்பிடு என்பேன்
பாரி மொபைல் போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு ஓரமாக போவான் ’என்ன கதை விடுவான் என்று தெரியாது.’
ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு சில நொடிகளில் அரக்க பரக்க அந்த இசை தென்றல் காற்றாய் வந்து ஸ்டுடியோவின் காதுகளின் ஓரமாய் நுழையும்..!
இன்னொரு
‘அண்ணே ஜானதி பூரிவாசனை கூப்பிடவா..?’ என்பான்
‘நேத்துதானடா அவங்கள கூப்பிட்ட.. இன்னும் ரெண்டு நாள் போட்டும்..:
என்பேன் பாரி போனை எடுத்துக் கொண்டு ஓரமாய் போவான்
’என்ன சார் காலையிலேயிருந்து பிஸியா இருக்கீங்க போல... ரெம்ப நேரமா டிரை பண்ணுறேன் உங்க நம்பர் கெடைக்கவே இல்லை..’ என்று கதை விட்டு காங்கிரஸ் கட்சியின் இராமண்ணாவை வர வைத்து விடுவான்.!

நாள்
இப்படி ஒரு நாள் கம்பனி ஆர்ட்டிட் ஒருவருக்கு, பாரி, தொலைபேசியில் அழைப்பு விடுத்த லாவகத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.அதை இப்போது சொன்னால் தம்பி என் மீது கொலை வெறியாகி விடுவான்.?
மூத்தபத்திரிகையாளர் ஒருவர், கர்நாடக இசை, ஜானதி பூரிவாசன்,.காங்கிரஸ் கட்சியில் ராமண்ணா, அதிமுகவில் டௌரி சங்கர்,திமுகவின் சி.பி ரோமலிங்கம் ஆகியோரே பெரும்பாலும் எங்கள் பிரதான கம்பனி ஆர்ட்டிஸ்டுகள்.
மூத்த பத்திரிகையாளர் மகாமணி உண்மையிலேயே கருத்துச் செறிவோடு பேசும் குணமுடையவர். அவர் மேல் எங்கள் அனைவருக்கும் பெரு மதிப்பும் பேரன்பும் உண்டு.
அவரை நாங்கள் கம்பனி ஆர்ட்டிஸ்ட் லிஸ்டில் வைத்திருக்கவில்லை என்றாலும் அவரது அலுவலகம் எங்கள் ## டிவியின் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்ததால் சில நேரங்களில் அவரையும் கம்பனி ஆர்ட்டிஸ்ட்டாக பாவிக்கலானோம்.!
ஆனால் தன் அனுபவ அறிவின் காரணமாக ‘ஆள் கிடைக்காமல் நம்மை அழைக்கிறார்கள்’ என்பதை விரைவாகப் புரிந்து கொண்ட அவர், பின்னர் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்த்ததோடு நாங்கள் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்த போது எரிச்சலடையவும் ஆரம்பித்து விட்டார்.உண்மையில் இன்று எல்லா டிவிக்களில் விவாத நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நீங்கள் இந்த பதிவை படிக்கும் இந்த நேரத்தில் இந்த டிவியிலிருந்து அந்த டிவிக்கு என்று எப்போதும் விருந்தினர்கள் குறுக்கும் நெடுக்குமாக மூச்சிரைக்க ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். .
இவ்வாறாக நமது தொலைக்காட்சியை திறந்தால் உள்ளூர் முதல் உலக விஷயஙக்களை எல்லாம் அலசி ஆராய்ந்து அடித்துச் துவைத்து காயப்போடும் இந்த கருத்து சிகாமணிகளுக்கு தாங்கள் ஒரு 'கம்பனி ஆர்டிஸ்ட்' என்கிற விஷயம் மட்டும் புரிவதே இல்லை
என்ற விஷயத்தை தங்கள் முக நூல் நிலைத் தகவல்களில் அவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு அடையும் ஆனந்தத்தை வைத்தே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..?
என்ன செய்வது அத்தனை டிவி களுக்கும் விருந்தினர் பற்றாக்குறை அதனால்தான் கம்பனி ஆடிஸ்ட்டுகள் என்ற ஒரு ரகசிய பிரிவினரை தயார் நிலையில் வைக்க வேண்டிய நிலைமை..!
பீகார் மற்றும் மணிப்பூர் லேபர்களையெல்லாம் விருந்தினராக கூப்பிடும் நிலமை வரும் வரைக்கும் வேறு வழியின்றி இந்த நிலைமை தொடரும்..?
எப்போதாவது பொருத்தமான விவாதங்களில் மட்டுமே பங்கேற்கும் எச் .ராஜா, தமிழருவி மணியன், ஞானி, அருள்மொழி, சி.மகேந்திரன். தோழர் தியாகு,பீட்டர் அல்போன்ஸ், மணியரசன்,சுப.வீரபாண்டியன் ஆகியோர் இந்த கம்பனி ஆர்ட்டிஸ்ட் லிஸ்டில் வர மாட்டார்கள்.!
அதிலும் எங்கள் வசம் இருந்த கம்பனி ஆர்டிஸ்ட்கள் மிகவும் அப்பாவிகள், ஒருமுறை பாரியிடமிருந்து போன மிஸ்டு காலை பார்த்தே ‘ சொல்லுங்க பாரி எத்தனை மணிக்கு ஷூட்டிங்..’ என்று கேட்டு சரியான நேரத்திற்கு கிளம்பி வந்து விவாதத்தில் பங்கெடுத்த அந்த அம்மணி இப்போது தேசியக் கட்சியில் முக்கிய பிரமுகர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..! .
எங்களின் ’கம்பனி ஆர்ட்டிஸ்ட்’ லிஸ்டில் இருந்த பெரும்பாலான அரசியல் பிரபலங்கள் அனைவருமே அவர்களது கட்சிகளில் ஜூனியர் ஆர்டிஸ்டுகளாகவே இருந்தனர். அவர்களுக்கு இங்கு கிடைத்த ஹீரோ வேடம், கட்சியில் அவர்களின் அந்தஸ்த்தை கொஞ்சம் உயர்த்தியது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை..!
பால கைலாசம், சந்துரு சார், ராம்ஜி கூட்டணி ’மின் பிம்பங்கள்’ மூலமாக இரண்டாயிரத்தின் துவக்கங்களிலேயே விஜய் டிவியில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்..
அப்போது அங்கு கம்பனி ஆர்ட்டிஸ்டுகளாக இருந்த பலரும் எங்கள் லிஸ்டிலும் இருந்தார்கள்.
அதிமுக, திமுக போன்ற கட்சிகளிலிருந்து பொதுவாக பிரபலங்கள் எவரும் இத்தகைய நிகழ்ச்சிக்களுக்கு அழைத்தவுடன் வருவதில்லை.
அரசியல் தர்ம சங்கடங்களை தவிர்க்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தவிர்ப்பது அவர்களது வழக்கம்.
கம்பனி ஆர்டிஸ்ட்கள் பலரும் தங்கள் சொந்த கட்சியில் வளரவும், அரசியலில் ஒரு ஆளாகவும் ,இந்த வாய்ப்புகள் பெரிய அளவிற்கு உதவின என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்தோம் ..!
’கதையல்ல நிஜம்’ (பாகம் 1) நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 2004 நாடாளுமன்ற தேர்தலையொட்டி விஜய் டிவியில் மின்பிம்பங்கள் வழங்கிய ’மக்கள் யார் பக்கம்’ நிகழ்ச்சிக்கும் நான் தான் நிர்வாக தயாரிப்பாளர்.அப்போது ஒரு நாள் நிகழ்ச்சிக்கு ரோமலிங்கத்தை விவாதத்திற்காக அழைத்திருந்தோம்.
அப்பொது திமுகவில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்த ரோமலிங்கம் கட்சித் தலைமையைப் பற்றி எங்களுடன் புலம்பிக் கொண்டிருந்தார்.
திமுகவில், தலைவர் குடும்பமும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே வாழ்க்கை என்றும் தன்னைப்போலவே பலரும் வெளியேற தயாராக இருப்பதாகவும் தான் பா ஜ க வில் சேரப்போவதாகவும் சொல்லிக்கொண்டார்.
ஆனால் அவரது அதிர்ஷ்டம், அந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற்று விட்டது.வெற்றி பெற்ற கட்சியை விட்டு வெளியேற யாருக்குத்தான் மனம் வரும் அவர் அப்படியே அமைதியாகி விட்டார்...!
காலச்சக்கரம் சுழன்றது. கட்சியில் முக்கியத்துவம் ஏதும் இல்லையென்றாலும் திமுக தலைமையின் பார்வையில் படும் படி ஓடிக்கொண்டிருந்தார் ரோமலிங்கம்..! ஆனாலும் மு க ஸ்டாலினின் கடைக்கண் பார்வை அவர் மேல் திரும்பவே இல்லை..!
2010 ல் மாநிலத்தில் திமுக ஆட்சி மத்தியில் திமுக பங்கு பெற்ற ஐக்கிய தேசிய கூட்டணியின் அமைச்சரவையில் மு.க அழகிரி கேபினட் அமைச்சர்.
தினகரன் எரிப்பு, ரவுடிகள் அட்டகாசம் என அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள்.முக ஸ்டாலினுக்கும் அவருக்கும் விரிசல்கள் வேறு
வெளிப்படையாக துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருந்த நேரம்..?
’அழகிரியின் அதிரடிகள்’ இது பற்றி முதல் குரலில் விவாதிக்கலாம் என்றேன்.பாரி திமுகவின் இளங்கோவனை அழைத்தான் . சப்ஜக்ட்டை கேட்டு அவர் ஜகா வாங்கிவிட, வழக்கம்போல எங்கள் கம்பெனி ஆர்ட்டிஸ்டும் சுதாங்கனின் நண்பருமான ரோமலிங்கத்தை அழைக்க முடிவு செய்து வழக்கம்போல பாரிதான் அவரை அழைத்தான்.
அவரும் வந்தார்..
விவாதம் துவங்கியது அதிமுக சார்பில் அவர்களின் தலைமைக்கு தெரியாமல் அவ்வப்போது எங்கள் விவாதங்களில் கலந்து கொள்ளும் டௌரி சங்கர் தான் அன்று எங்கள் எதிர் தரப்பு விருந்தினர்.
அவர் ’அழகிரி ஒரு ரௌடி .. கொலைகாரன் .. இரக்கமற்ற கொடியவன்.. பலர் வாழ்வை சூனியமாகிய சண்டாளன் ‘ என்ற தொனியில் பேச.. ரோமலிங்கமோ ‘அண்ணன் அழகிரி ஒரு தேவதூதன் திமுகவை இரட்சிக்க வந்த இரட்சகன் .. தயாளுவைவிட தாயுள்ளம் கொண்டவர்.. கலைஞரைவிட கருணையானவர்..’ என்பது மாதிரி முழு நிகழ்ச்சியிலும் ’அடித்து’ தூள்கிளப்பிக் கொண்டிருந்தார்.இடையில் டௌரி சங்கரை பேசவே விடவில்லை..
அழகிரிக்காக இந்த அளவிற்கு குரலை உயர்த்தி உடலை வருத்தி இப்படி எவரும் இதற்கு முன்னரும் பின்னரும் முழங்கியதில்லை அப்படி ஒரு வீர முழக்கம்..?
நிகழ்ச்சி ஒளிபரப்பான மறு நாளே அழகிரியிடமிருந்து அழைப்பு வந்ததும் அடுத்த சில நாட்களில் அவர் அழகிரி கோட்டாவில் ராஜ்யசபா உறுப்பினரானதெல்லாம் நாடறிந்த கதை..!
ஒரு அரசியல் கட்சியில் அங்கீகாரத்தைப்பெற கொடி கட்டி, கோஷம் போட்டு, தொண்டர்களைக் கூட்டி கூட்டம் சேர்த்து, அடக்குமுறை சிறை எதையையும் இனி அனுபவிக்கத் தேவையில்லை..!
ஏதாவது ஒரு தொலைக்காட்சியின் காலைக்காட்சியில் தோன்றி, கத்தி தீர்த்தால் போதும். கட்சியில் அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற நிலைமை இன்று வந்த பிறகு யார்தான் இத்தகைய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற விரும்ப மாட்டார்கள்..!
ரோமலிங்கத்தைப் போலவே எங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் வந்து பங்கு பெற்று நாலு பேருக்கு தெரிய வந்தவர்கள் இன்று பிரபல அரசியல் கட்சிகளிலும் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தமட்டில் முல்லை தேர் தந்தவன் ஒரு பாரி என்றால் இன்று தாமரை தடாகத்தில் பூத்துக் குலுங்கும் இரு கொடிகளுக்கும் கார் அனுப்பி அழைத்து வந்து,
அவர்களின் அரசியலில் வாழ்வை பிரகாசமாக்கியது நம்ம பாரிதான் என்பேன்..!
இவ்வாறு எங்கள் நிகழ்ச்சிக்கு கம்பனி ஆர்டிஸ்ட்டுகளாக வந்த பலரும் இன்று நாடறிந்த தலைவர்களாக ஆகியிருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை என்பதா அல்லது இந்த நாட்டின் துரதிஷ்டம் என்பதா என்ற குழப்பத்திலேயே நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அதன்பின் அடுத்த சில நாட்களில் நிர்வாகம் இந்த நிகழ்ச்சிக்கு இரு ஆங்கர்கள் தேவை இல்லை என்று முடிவெடுத்து ஒருவரை நீக்கி விட்டது.அதே போன்று பாரியையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து எடுத்து வேறு ஒரு நிகழ்ச்சிக்குக்கு தயாரிப்பாளராக்கி விட்டார்கள்.
நானும் சுதாங்கனும் மட்டுமே எங்கள் நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தோம்.!
இவ்வாறான பல காமெடி காட்சிகளுடன் Zee தமிழ் டிவியில் எனது பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது ஜலால் என்பவர்தான் அங்கு சீப் நியூஸ் எடிட்டராக இருந்தார்.
எனக்கு நிர்வாக ரீதியாக அவர்தான் தலைமை என்றாலும் அவர் என் விஷயங்கள் எதையும் கண்டு கொள்ள மாட்டார். அதாவது ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் அறுப்பது, கேள்விகள் கேட்டு குடைவது போன்ற எந்த தொல்லைகளும் அவர் தரப்பிலிருந்து வராது.அதனால் அவர் நல்ல நண்பராகவும் இருந்தார்.
இந்த நிலையில் பாபர் இருந்த இடத்தில் ராமரை வைக்க நினைத்தது போல தகுதியும் அனுபவமும் மிக்க ஜலாலுக்கு விடை கொடுத்த நிறுவனம் அந்த இடத்திற்கு நம்ம பரோட்டா மாஸ்டரை ஒரு நாள் தலைமை செய்தி ஆசிரியராக நியமித்தது..!
(தொடரும்)