Wednesday 8 January 2014

மலையாள சினிமா உலகம் கொண்டாடும் நடிகர்,இயக்குநர்,திரைக்கதாசிரியர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு



சீனிவாசன் எனும் மனிதர்..!

நீண்ட நாள் பழகிய ஒரு பக்கத்து வீட்டுக்காரரைப்போல இயல்பாக பழகுகிறார் சீனிவாசன்..!
மலையாள சினிமாவில் தொட்ட இடங்களிலெல்லாம் தன் முத்திரையை பதித்து, திரைகதாசிரியர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்துவிட்ட சீனிவாசன், தான் திரையில் உலாவவிட்ட எதார்த்த கதாபாத்திரங்களைப் போலவே ஒரு எளிய எதார்த்த மனிதராக இருக்கிறார்.
எனது திரைக்கதை ஒன்றை விவரிப்பதற்காக கடந்த சில நாட்களாக சீனிவாசனை சாரை சந்திக்க நேரம் கேட்டுக்கொண்டே இருந்தேன்..
(ஏறக்குறைய ’ இது கொல்லன் தெருவில் ஊசிவிற்கும் முயற்சி’ என்று தெரிந்தே இந்த முயற்சியில் நான் இறங்கினேன் )
அவர் சென்னைக்கு வரும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே போனது,
இரண்டு நாளைக்கு முன்பு எர்ணாகுளத்திற்கு கிளம்பி வருமாறு சொன்னார் சீனிவாசன்..
*
ஞாயிறு இரவில் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் மெயிலில் பயணிகளோடும், சக எலிகளோடும் பயணம் தொடர்ந்தது.
ஓடும் ரயிலின் சீட்டுக்கு கீழே எலிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
‘இந்த எலிகளை ஒழிக்க என்ன செய்யலாம்..’ என்று யோசித்தேன்.
தென்னக ரயில்வே ஒவ்வொரு ரயிலிலும் ரெண்டு மூன்று பூனைகளை வாங்கிவிடுவதே சிறந்த வழி என்று தோன்றியது.
ஏதாவது ஒரு குழந்தையை எலி கடித்து குதறுவதற்குள் தென்னக ரயில்வே, பொறுப்பை பூனைகளிடம் ஒப்படைப்பது நல்லது..?
(தென்னக ரயில்வேக்கு இதுபற்றி விரைவில் ஒரு கடிதம் எழுத வேண்டும்).
*
திங்கட்கிழமை காலையில் எர்ணாகுளம் ஜங்ஷனில் போய் இறங்கியதும் அருகேயே ரூம் எடுத்து குளித்துவிட்டு சீனி சாருக்கு போன் போட்டேன்
‘ஓ வந்தாச்சா.‘ என்றவர் ‘இன்றைக்கு எதிர்பாராத விதமாக ஒரு டப்பிங் வந்துட்டுது.. அதனால டைம் சரியா சொல்ல முடியல ஒரு மணி நேரத்துல நானே கூப்பிடுறேன் வெயிட் பண்ணுங்க..’ என்றார்.
*
நான் என் கல்லூரி நாட்களில் (1989) இரண்டாவதாக பார்த்த மலையாளப்படம் சீனிவாசன் எழுதி சத்தியன்அந்திக்காடு இயக்கிய ’வரவேழ்பு’ (Varavelpu) திரைப்படம்.
அப்போதெல்லாம் எனக்கு சீனிவாசனைப்பற்றி எதுவும் தெரியாது அதற்கு முன் நான் பார்த்த(1987) மோகன்லால் நடித்த ’ஜனவரி ஒரு ஓர்ம’ என்ற படம் எனக்கு பிடித்திருந்ததாலும் அந்த படத்தில் நடித்த மோகன்லாலின் நடிப்பு அதற்குமுன் பார்த்த தமிழ் சினிமா ஹீரோக்களின் நடிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததாலும் நான் மோகன்லால் தீவிர ரசிகனாக மாறி இருந்தேன்,
அதன் பிறகுதான் மமுட்டி,ஜெகதி ஸ்ரீகுமார், சீனிவாசன்,நெடுமுடிவேணு,லால் என்று துவங்கி இன்று நடித்துக் கொண்டிருக்கும் ஆசிப் அலி வரைக்கும் என்னால் கவனிக்க முடிந்த அத்தனை நடிகர்களையும் நான் கவனிக்க ஆரம்பித்தேன்.அந்தவகையில் சீனிவாசனையும் ஒரு நடிகராகத்தான் எனக்குத்தெரியும்.
தொண்ணூறுகளில் தினமணி வெள்ளிமணியில் சீனிவாசனின் படங்களைப் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தோடு ஒரு கட்டுரை வந்திருந்தது.
அந்த கட்டுரைதான் சீனிவாசன் என்ற அற்புதமான படைப்பாளியை எனக்கு அறிமுகப் படுத்தியது.
சீனிவாசனை ஒரு நடிகராக மட்டுமே அறிந்த, என் அறியாமையை விரட்டியதோடு அவர் ஒரு திரைக்கதையாசிரியர் மட்டுமல்ல வெற்றிகரமான இயக்குனரும் கூட என்று உணர்த்தியது அந்தகட்டுரை.
அதன் பிறகு ஏசியா நெட் டிவியில் நான் கண்ட ‘சிந்தாவிஷ்டாய சியாமளா’ ‘வடக்கு நோக்கி எந்திரம்’ ‘சந்தேசம்’ ஆகிய அவரது படங்கள் மலையாள சினிமாமேல் மேலும் மேலும் மரியாதையையும்,சீனிவாசன் மேல் எனக்கு மிகப்பெரிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.சீனிவாசன் திரைக்கதை எழுதி சிபிமலையில் இயக்கிய ‘தூர தூர ஒரு கூடுகூட்டாம்’ திரைப்படம் நான் மிகவும் ரசித்த சினிமாக்களில் ஒன்றாகிவிட்டது.

சீனிவாசனின் ‘சிந்தாவிஷ்டாய சியாமளா’ தங்கர்பச்சானால் ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ என்ற பெயரிலும் ‘வடக்கு நோக்கி எந்திரம்’ கருணாஸால் ‘திண்டுக்கல் சாரதி’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டன.

சீனிவாசனின் கைவண்ணத்தில் மலையாளத்தில் பிரம்மாதமாக அழகுற வெளிவந்த இந்த படங்கள் தமிழில் அந்த அளவிற்கு சிறப்பாக தயாரிக்கப்படவில்லை என்பதே என் கருத்து.

அதே போன்று சீனிவாசன் எழுதி நடித்து கேரளாவில்அமோக வேற்றி பெற்ற ’உதயனாணு தாரம்’ தமிழில் ’வெள்ளித்திரை’யாகவும் ‘கதபறையும்போள்’ ‘குசேலனாகவும்’ தமிழில் கொல்லப்பட்டன.!
இந்த தோல்விகளுக்கெல்லாம் தயாரிப்பில் நடந்த குறைபாடுகளைத்தவிர வேறு காரணம் ஏதுமில்லை என்பதே என் கருத்து.
*
ஒரு அரை மணி நேரம் போயிருக்கும் சீனிவாசன் சாரிடமிருந்து அழைப்பு
எங்கே இருக்கிறீங்க..’
நான் விடுதியின் பெயரையும் இடத்தையும் சொன்னேன்
அங்கேயே இருங்க… நான் டிரைவரையும் காரையும் அனுப்புறேன்… வந்திருங்க..’
சார்.. எதுக்கு உங்களுக்கு சிரமம்.. நானே ஒரு ஆட்டோ பிடிச்சு வந்திர்றேன்..’ இது நான்,
வெண்டாம் நீங்க வழி கேட்டு வற்றதுக்கு சிரமப்படுவீங்க.. நான் கார் அனுப்புறேன் .. நேர சந்திப்போம்..’
*
சற்று நேரத்தில் ஒருவர் எனக்கு போன் செய்து நான் தங்கிருந்த முகவரியை உறுதி செய்துவிட்டு, ’கார் வந்து கொண்டிருக்கிறது.’ என்றார்.
அடுத்த அரை மணி நேரத்தில் காரோடு வந்த டிரைவர் அனிஷ் எர்ணாகுளத்தின் சந்து பொந்துகளுக்குள் நுழைந்து என்னை நடிகர் லாலின் Lal media ஸ்டுடியோவிற்கு என்னை அழைத்துப்போனார்.
அங்கேதான் சீனிவாசன் டப்பிங்கில் இருந்தார்.
சற்று நேரம் அங்கு காத்திருந்தேன்.

*
சில காலத்திற்கு முன்புவரை பெரும்பான்மையான மலையாள சினிமாக்களின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் சென்னையில்தான் நடந்தன, ஆனால் இப்போது எர்ணாகுளத்தில் இந்த Lal media தவிர ,மோகன்லாலின் Vismayas Max ,மற்றும் Mega Studio என்று மூன்று நான்கு ஸ்டுடியோக்கள் இருக்கின்றன.இவற்றில்தான் இப்போது பெரும்பான்மையான மலையாள சினிமாக்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடந்து கொண்டிருக்கின்றன.
*
கொஞ்ச நேரத்தில் டப்பிங் அறையிலிருந்து வெளியே வந்த சீனிவாசன் சாருக்கு வணக்கம் சொன்னேன்.
என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ‘’வந்து ரெம்ப நேரமாச்சா.. ?’ என்றார்.
அருகே இருந்த ஒரு சோபாவில் என்னையும் உடகார்ச் சொல்லிவிட்டு உரையாட ஆரம்பித்தார் சீனிவாசன்.
*
என்னைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டார்.
கதை சொல்ல ஆரம்பித்தேன்.
ஒரு கதையை சொல்லி முடித்தவுடன் ‘இனி சாப்பிட்டுட்டு வந்து பேசுவோம்..’ என்றவர் தன்னோடு என்னையும் அழைத்துப்போனார்.
*
மேலே இருந்து இறங்கி வரும் வழியில் நடிகர் திலிப்பும் ஜெயசூர்யாவும் வந்து அவரிடம் மரியதைகாட்டி மகிழ்ந்து சென்றனர்.
உணவுக்கூடத்துக்குள் நுழைந்தோம் நேராக கைகழுவும் வாஷ் பேஷினுக்கு என்னையும் அழைத்துப்போனார் யாரும் அவருக்கு கைகழுவ தண்ணீர் எடுத்துவரவில்லை, பவ்யமாக டவல் நீட்ட ஆளில்லை எல்லாம் எதர்த்தமாக இருந்தது..!
அங்கிருந்தவர்களில் அனேகம் பேர் அவரைப்பார்த்ததும் மௌனமாய் புன்னகைத்தார்கள். அந்த புன்னகைக்குள் ஒரு மரியாதை ஒழிந்திருந்ததை கவனித்தேன்.

காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் ஒன்றில் நானும், அவரும் அமர்ந்தோம்.
குண்டுகுண்டான சம்பா அரிசி சோறு, காய்கறி கூட்டு, மீன் குழம்பு, என்று எல்லோருக்கும் போல அவருக்கும் அவருடன் இருந்த எனக்கும் வந்தது.
அவருக்கு ஏதாவது சிறப்பு படையல் ஏதும் இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் கவனித்துப்பார்த்தேன்.
அங்கு எல்லோருக்கும் என்ன வழங்கப்பட்டதோ அதேதான் அவருக்கும் வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் சாம்பார்தான் தமிழர்களுக்கு பிடித்த பானம் என்று அவர் கருதியிருந்தார் போலும்
இரண்டு மூன்று முறை என்னிடம் ’சாம்பார் ஊத்திக்கிடுறீங்களா..?’என அவர் அக்கறையாகக் கேட்க, எனக்கும் சாம்பாருக்கும் ஆகாது என்று மீன் குழம்பில் மூழ்கிவிட்டேன்.
இடையில் ‘இந்த அரிசி சாப்பாடு உங்களுக்கு..’ என்று அவர் ஆரம்பிக்க
எனக்கு இதுதான் ரெம்ப பிடிக்கும் பழைய பாரம்பரிய தமிழ்நாட்டில் இதைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் ’ என்றேன்.
சாப்பிட்டு விட்டுவந்ததும் எனது இரண்டாவது திரைக்கதையையும் முழுமையாக கேட்டார்.
*
ஒரு இரண்டு மணி நேரம் அவரோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தது மறுபடியும் டப்பிங் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியது.
நாம் விடைபெறலானேன்
’மறுபடியும் நாம் பேசுவோம்.. கூப்பிடுறேன்..’ என்றவர் என்னை அனுப்ப டிரைவரை தேடினார்.
நெகிழ்ந்து போன நான் அதைக்காட்டிக்கொள்ளாமல்
’சார் நான் ஒரு வழிப்போக்கன்.. எனக்கு ஏன் இவ்வளவு கேர் எடுக்குறீங்க… உங்கள பாத்ததே எனக்கு சந்தோஷம்..’ என்றேன்.
இல்ல என்னத் தேடி இவ்வளவுதூரம் வந்திருக்கீங்க.. நான் உங்கள கவனிக்க வேண்டாமா..?’ திருப்பிக்கேட்டார் சீனிவாசன்.
*
ஒரு பெரும் நடிகர் இயக்குனர்,கதாசிரியர்,தயாரிப்பாளர் என அறியப்பட்ட கேரள மக்களால் கொண்டாடப்படும் சீனிவாசனோடு நான் அங்கிருந்த நேரத்தில் அங்கிருந்த யாரும் அவரிடம் பணிந்து பாசாங்கு செய்யவில்லை போலியாய் பொய்முகம் காட்டவில்லை.
எல்லோரும் நிமிந்தே நின்றார்கள்.ஆனால் கண்களில் மரியாதையும் புன்னகையில் அன்பும் இருந்தது.

காரணம் அங்கு மனிதர்களுக்கிடையில் அவரும் ஒரு மனிதராக இருந்தார்..?

No comments:

Post a Comment