Friday 8 January 2016




ஒரு லைன் ஹெட்லைன் ஆன கதை - 2
#######################################
ஒரு லைன் ஹெட்லைன் ஆன கதை - 1 ஐ படித்துவிட்டு ஒரு நண்பர் ஒருவர் கம்பனி ஆர்ட்டிஸ்டுகள் பற்றி விரிவாக இன்னொரு பதிவு போடுங்கண்ணே.. சூப்பர்.’ என்றார். இன்னொரு நண்பர் இதை அடிப்படையாக வைத்து திரைக்கதை ஒன்று எழுதுங்கள் என்றார்.
உண்மையில் அப்படி ஒரு திரைக் கதையை நான் ஏற்கனவே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
தொலைக்காட்சி ஒன்றில் ஜொலிக்கும் ஒரு தம்பி போன் போட்டு,
‘ஏண்ணே கம்பனி ஆர்டிஸ்டுகள் மானத்த இப்படி வாங்கிட்டீங்க.. நாங்கள்ளாம் இனி எப்படிண்ணே ஷோ நடத்துவோம்..’ என்று கேலியாகக் கேட்டார்.
அவருக்கு நான் சொன்னேன்
‘நான் எழுதியதை முதலில் கம்பனி ஆர்ட்டிஸ்டுகள் படித்திருக்க மாட்டார்கள்.. அப்படியே படித்தாலும் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை.. உங்கள் ஷோக்களில்வரும் கம்பனி ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கு இந்த டிவி விவாதங்கள் தன் தெருவிலும் கட்சியிலும் நண்பர்களிடத்திலும் ஏன் சிலருக்கு சொந்த வீட்டிலும் கூட கொஞ்சம் மரியாதையை ஏற்படுத்தியிருக்கக்கூடும். தெருவோர டீக்கடை விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டவர்கள் டிவி விவாதங்களில் வந்து அதன் சுகத்தை அனுபவித்த பிறகு, அவர்களுக்கு இதெல்லாம் எருமை மாட்டின் மீது விழுந்த ஒரு மழைத்துளிக்கு சமம்... இன்னும் சொல்லப்போனால், இந்த டிவி ஷோக்கள் எல்லாம் ஒருநாள் திடீரென நிறுத்தப்பட்டால், இப்போது புதிதாக களத்திற்கு வந்திருக்கும் சில ’கம்பனி ஆர்ட்டிஸ்டு’ களின் நிலமை ரொம்பவும் பரிதாபமாகிவிடும்.. அவர்கள் ஒரு வித மனஅழுத்தத்திற்கு ஆளாகலாம். இன்னும் சிலர் தற்கொலைக்குக்கூட முயற்சிக்கும் அபாயம் இருக்கிறது... இதுவும் கிட்டத்தட்ட போதை பொருளுக்கு அடிமையாவதைப்போலத்தான்..!’ என்றேன்.
இது போக தற்போது பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும் கம்பனி ஆர்டிஸ்ட்டாக பவனி வரும் ஒருவர் அடிக்கடி ’ராஜ்யசபா’ கனவிலும் திளைக்கிறாராம்..! என்கிறார் அவருக்கு நன்கு நெருக்கமான ஒரு நண்பர் ..?
இனி நம்ம கதைக்கு வருவோம்..!
அயோத்தியில் பாபரை அகற்றிவிட்டு, அதே இடத்தில், ராமரைக் கொணர முயற்சித்ததைப் போல, அதுவரை நியூஸ் எடிட்டராக இருந்த ஜலாலை அகற்றிவிட்டு, அந்த இடத்துக்கு பரோட்டாமாஸ்டரை நியூஸ் எடிட்டராக நியமித்தது ZEE தமிழ் நிர்வாகம்.
சாந்த சொரூபியாய் காட்சியளித்த பரோட்டா மாஸ்டரை பார்த்தாலே கும்பிடத் தோன்றும், அந்த அளவிற்கு எளியத் தோற்றம்.
இயல்பாக நடிக்கும் ஒரு குணச்சித்திர நடிகரைப் போலத்தான் முதலில் அறிமுகமானார் நம்ம பரோட்டா மாஸ்டர்.
இதற்கு முன்னர் அன்றைய எதிர் கட்சி டிவியில் கமாண்டர் ஆக இருந்ததாகவும், அதற்கு முன்னர் பிபிசி யின் டெல்லி அலுவலகத்தில் முக்கிய பதவியில் இருந்ததாகவும் அறிமுகப்படுத்தினார்கள்.
’வெல்கம் டு இந்தியா’ என்று வழக்கம் போல வாழ்த்திவிட்டு விடைபெற்றேன்.
மறுநாள், முதல் குரல் நிகழ்ச்சிக்கு என்ன பண்ணலாம் என்று சுதாங்கன் சாரிடம் விவாதித்தேன்.
அப்போது தமிழ் தேசியம் VS திராவிட இயக்கம் என்று ஆங்காங்கே கருத்து மோதல்கள் நடந்து கொண்டிருந்த நேரம். எனவே அது பற்றியே நாளைக்கு விவாதிப்போம் என்று முடிவெடுத்தோம்.
இதைப் பற்றி விவாதிக்க தமிழ் தேசிய பொது உடமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசனை விருந்தினராக அழைக்கலாம் என முடிவு செய்து அவரைத் தொடர்பு கொண்டேன். அன்று சென்னைக்கு வருவதாக இருந்த அவரும் நிகழ்ச்சிக்கு வர ஒத்துக் கொண்டார்.
மாலையில் ஷூட்டிங்.
மதியம் போல நியூஸ் ரூம் பக்கமாக போய்க்கொண்டிருந்த என்னை அழைத்தார், புதிதாய் வந்த அந்த பரோட்டா மாஸ்டர்.
‘ஆமா இண்ணைக்கு என்ன சப்ஜக்ட்..?’
என்று கேட்ட அவரிடம் ‘தமிழ் தேசியம் திராவிட தேசியம் ஏன் இந்த முரண்பாடு..? இதுதான் சார் சப்ஜக்ட்..’ என்றேன்.
‘அப்படியா guest யாரு..?’ என்று மீண்டும் கேட்டார் மாஸ்டர்.
தன் ஆளுகைக்குள் என்னை கொண்டு வர முடிவெடுத்து விட்டார் என்பதை அடுத்த சில நொடிகளில் உணர்ந்து கொண்ட நான்,
‘பெ மணியரசன் தான் சார் guest ..’ என்று சொல்லி வாயை மூடுவதற்குள்.
’வேற யாரும் நல்ல guest கிடைக்கலையா..’ என்றார் மாஸ்டர்.
ஒரு படத்தில் ‘நான் போலிஸ் இல்ல, பொறுக்கி..’ என்று விக்ரம் சொல்வது போல ’நான் மாஸ்டர் இல்ல மடையன்’ என்று அந்த ஆள் சொல்வது போல எனக்கு மைண்ட் வாய்ஸ் கேட்டது.!
உள்ளுக்குள் ஒரு முறை சிரித்துக் கொண்டு,
‘சார் பெ.மணியரசன் தான் இந்த சப்ஜெக்டுக்கு பொருத்தமான ஆள்... இந்த சப்ஜெக்ட்டுக்கு இவரைவிட பொருத்தமான ஆட்கள் இல்லை..’ என்றேன்.
என் பதிலில் திருப்தி அடையாத மாஸ்டர் கொஞ்சம் நக்கலான குரலில்
‘பெ மணியரசன் நான் கேள்விப்பட்ட பெயராவே இல்லையே..?’ என்றார்.
இதைக் கேட்டதும் எனக்கு கடுப்பு தலைக்கு ஏறியது ‘சார் உங்களுக்கு தெரியலைனா பரவாயில்லை எனக்கு தெரிஞ்சிருக்கு.. அது போதும்.. மணியரசன் எதையும் சித்தாந்தமாக அணுகக் கூடியவர். வழக்கறிஞர், நீண்ட நாட்களாக தமிழ் தேசிய பொது உடமைக் கட்சி என்ற ஒரு அமைப்பை நடத்தி வருபவர்.வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழ் தேசியம் பேசும் நபர் அவரல்ல..’ என்றேன் வழக்கத்தைவிட கொஞ்சம் குரலை ஏற்றியவாறு.
மாஸ்டருக்கோ ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. அது இல்லாத மீசைக்கு மேல் கொஞ்சம் எகிறிக் குதித்தாலும் கொஞ்சம் அடக்கிய குரலில்
‘மணியரசன்னு ஒரு ஆளே இல்ல அப்படி ஒரு ஆள யாருக்குமே தெரியாது .. ’ என்றார். எனக்கோ கோபம் உச்சந் தலைக்கு ஏறியது
‘சார் மணியரசன்னு ஒரு ஆள உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுங்க.. அது உங்களோட அறியாமை. அதுக்காக அப்படி ஒரு ஆளே இல்ல, யாருக்குமே தெரியாதுன்னு சொல்லாதீங்க ... உங்களுக்கு தெரியலைனா அது யாருக்குமே தெரியாதுங்றது முட்டாள் தனம்..’ என்றேன்.
என்னை எதிர் கொள்ள முடியாத அவர் வேகமாக் ஒரு நாலைந்து அடி பின்நோக்கி நகர்ந்து போய், தானுண்டு தன் வேலையுண்டு என்று ஏதோ டைப் செய்து கொண்டிருந்த அப்பாவி சேகர் என்ற டைப்பிஸ்டை உலுக்கி ‘ஏம்பா உனக்கு மணியரசனை தெரியுமா...?’ என்று கேட்க ஏற்கனவே எங்கள் மோதலை தலை குனிந்தவாறு கவனித்துக் கொண்டிருந்த சேகர் பயந்து போய், மாஸ்ட்ரை’ப் பார்த்து ‘தெரியாது..?’ சார் என்றான்.
அவ்வளவுதான்… மாஸ்டர் முகத்தில் பத்தாயிரம் வாட்ஸ் மின்சாரத்தின் பிரகாசம்.
‘பாத்தீங்களா இவருக்கே மணியரசன் யாருண்ணு தெரியலை..?’ என்றார் வெற்றிப் பெருமிதத்தோடு.
அவ்வளவுதான். என் பொறுமை(!) அணை உடைய, ஆத்திரம் ஆறானது. ”..யோவ் உன்னைய எவன்யா நியூஸ் எடிட்டரா வேலைக்கு எடுத்தான் .கூமுட்ட.. ஒன்னைய மாதிரி முட்டாள்கள நியூஸ் எடிட்டரா எடுத்தா, இந்த கம்பெனி வெளங்குமா..? உனக்கு தெரியாதுண்ணா உலகத்துக்கே தெரியாது’ண்ணு நெனக்கிற நீயெல்லாம் எப்படிய்யா இந்த வேலைக்கு வந்தே? அந்த அப்பாவிப் பையன்ட்ட போய் மணியரசனை தெரியுமாண்ணு கேக்குறியே .. அவங்கிட்ட இப்ப ‘ஒபாமாவுக்கும் ஒசாமாவுக்கும் என்ன வித்தியாசம்’ங்கிறத இப்ப கேளு அவன் என்ன சொல்றாம்ணு பாப்போம்..?’ என்று உச்ச ஸ்தாதியில் கத்த ஆரம்பித்தேன்.
மொத்த ஆபீசும் அரண்டு போய் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது குரல் கேட்டு, எடிட் ஷூட்டிலிருந்த ஆஜானுபாகுவான தம்பி ராஜி ஓடி வந்து என்னைப் பிடித்து ‘அண்ணே வாங்கண்ணே ...இதெல்லாம் இப்படித்தாண்ணே இருக்கும்... வாங்க ..’ என்று என்னை இழுத்துக் கொண்டு போய் விட்டான்.
அன்று மாலை பெ.மணியரசன் வந்தார். ஷோவும் ஒளிபரப்பானது.
எல்லாம் ’எனக்குத் தெரியும்… ’ என்ற ஆணவம் இருந்த அளவிற்கு மாஸ்டரிடம் ‘ஆவணங்கள்’ இல்லை என்பது எனக்கு புரிந்து விட்டது..
மறுநாள் என்னை பார்த்த மாஸ்டர் கொஞ்சம் வழிந்தபடி, “ என்ன சார் நேத்து ரெம்ப சூடாயிட்டீங்க ..?’ என்று கூலாகக் கேட்டார்.
‘ஸார், மணியரசங்கிற ஆளை உங்களுக்கு தெரியாதது தப்பில்ல.. அது உங்களோட அறியாமை. ஆனா அப்படி ஒரு ஆளே இல்லைணு நீங்க நிருபிக்க முயற்சி செய்தது முட்டாள்தனம்.. இதுக்கு சூடாகாம என்ன சார் பண்ண முடியும்? இனிமே இப்படியெல்லாம் நான்சென்சா பேசாதீங்க..?’ என்று அவருக்கு என்னால் முடிந்த ஒரு அட்வைசை கொடுத்து விட்டு அத்தோடு விட்டு விட்டேன்.
ஆனால் இப்படி ஒரு முட்டாளை ஒரு கார்பரேட் கம்பனி லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளத்துக்கு எப்படி எடுத்தது என்ற புலன் விசாரணையை ஆரம்பித்த போதுதான் அந்த ‘பரோட்டா சுட்ட கதை’ தெரிய வந்தது.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியிலுள்ள (BBC) பிபிசி அலுவலக லைப்ரரியில் ஒரு அசிஸ்டெண்டாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார் நம்ம மாஸ்டர்.
அங்கு அன்றாடம் வரும் செய்தித் தாள்களில் வரும் செய்திகளை தரம் வாரியாக பிரித்து வெட்டி ஒரு ஃபைலில் ஒட்டி வைப்பதுதான் அண்ணனின் அன்றாட பணி.
உதாரணமாக 2 ஜி என்ற ஃபோல்டரில் அது சம்மந்தமாக வரும் செய்திகளை ஒட்ட வேண்டும், தேமுதிக என்றால் அது சம்மந்தமான தகவல்களை வெட்டி ஒட்ட வேண்டும். அதாவது பிற் காலத்தில் பிபிசி செய்தியாளர் ஒருவருக்கோ சப் எடிட்டர் ஒருவருக்கோ தேமுதிக பற்றி ஒரு குறிப்பு தேவை என்றால் இந்த ஃபோல்டரை எடுத்துப் பார்த்தால் போதும். அவரது வேலை சுலபமாகிவிடும்.
இப்படி வெட்டி ஒட்டும் வேலையை செய்து கொண்டிருந்த மாஸ்டருக்கு அந்த வேலை போரடிக்க தன் தகுதிக்கும் திறமைக்கும் பொருத்தமான இடம் சென்னைதான் என்ற முடிவுக்கு வந்த மாஸ்டர் அங்கிருந்த படியே சென்னை சேனல்களுக்கு வலை வீசுகிறார்.
அவரது வலையில் முதலில் சிக்கியது ஜெயாடிவி, பிபிசியிலிருந்தே ஒருவர் நம்மிடம் வேலை கேட்கிறார் என்பதை ஒரு பெருமையாக நினைத்த ஜெயா உடனே இரு கரம் கூப்பி அவரை வேலைக்கு எடுத்துக் கொண்டது..!
அவ்வளவுதான்… ‘பிபிசியில் இருந்தார்... இப்ப ஜெயா டிவியில இருக்கார் இப்ப அவரை நம்ம டிவிக்கு எடுப்போம் என்று நினைத்த ZEE தமிழ் நிர்வாகம் அவரை நியூஸ் எடிட்டராகவே எடுத்து விட்டது.
இவர் வந்து கொஞ்ச நாளிலேயே ZEE தமிழ், செய்திப் பிரிவையே மூடி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியது.!
அப்போதுதான் பல தலைமுறைகளாக மீடியாவில் கோலோச்சியவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய சிந்தனைகளோடு அந்த டிவி வெளிவர ஆரம்பித்திருந்த நேரம்.
அந்த சேனலில் சர்க்கரைவாசன் என்ற ஒரு இனிமையான மனிதர் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு நண்பரான சந்தோஷ் என்கிற ஒருவர் நம்ம மாஸ்டருக்கும் பழக்கம்.
வேலையில்லாத நிலைமையில் சந்தோஷை அணுகிய மாஸ்டர், சர்க்கரை யை தனக்கு அறிமுகப்படுத்தும்படி பல நாள் நச்சரிக்க, கடைசியில் ஒரு நாள் தொல்லை தாங்காமல், சர்க்கரை வாசனிடம் நமது மாஸ்டரை அழைத்துப் போய், அவருக்கு ஒரு வேலை வழங்கும்படி அறிமுகப்படுத்தினார் சந்தோஷ்.
‘பிபிசி யில் சுட்டார்.. ஜெயாவில் சுட்டார் பின்னர் ZEE தமிழிலும் சுட்டார்’ ,என்று தோற்றத்திலும்ல் அசத்திய மாஸ்டரின் ’சுட்ட கதைகளை’க் கேட்ட சர்க்கரை வாசன் அவரை முக்கிய பொறுப்பு ஒன்றிற்கு எடுத்துக் கொண்டார்..!
அதன்பிறகு சந்தோஷ் சிரிக்கவே இல்லை.
‘இந்த ஆளை எனக்கு ஏன் அறிமுகப்படுத்தினே?” என்று சர்க்கரைவாசன் சந்தோஷை கேட்கும் படிக்கு நிலமை சில நாட்களிலேயே தலைகீழானது.
மாஸ்டரின் அரசியல் சாதுர்யத்தில், சர்க்கரை வாசன் சேனலிருந்து வெளியேற அந்த கம்பனியில் ஃபீல்ட் மார்ஷலாகவே ஆகி விட்டார் நம்ம பரோட்டா மாஸ்டர்.
தற்போது கால ஓட்டத்தில் மாஸ்டரின் ‘ சுட்ட கதைகள்’ கம்பனியில் பரவலாக எல்லோருக்கும் தெரிய வர, ஆரம்பத்தில் கிடைத்த அந்த மரியாதை இப்போது அவருக்கு அங்கு இல்லை..!
கொடுத்த ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தை திருப்பி வாங்கவும் கம்பனிக்கு ஒரு தயக்கம். ஏனென்றால் நிறுவனத்தை நிர்வாகம் செய்பவர் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடப்பவர். மனசாட்சிக்கு மட்டுமே மரியாதை தருபவர்.. எவரையும் புண் படுத்த விரும்பாதவர்..!
இதற்கிடையில் ஒருநாள் கம்பனியிலிருந்து கோபித்துக் கொண்டு போனார் நம்ம பரோட்டா மாஸ்டர். போனவர் திரும்ப வர மாட்டார் என்று எல்லோரும் நினைத்திருக்க,..
சமீபத்தைய வெள்ளப் பெருக்கில், அடையாற்றின் கரைகளைத் தாண்டி அந்த டிவி க்குள்ளும் புகுந்த வெள்ளம் கூடவே கொஞ்சம் குப்பைக் கூளங்களையும் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து சேர்த்திருந்தது...?
தண்ணீர் வடிந்து, அலுவலகத்தை சுத்தம் செய்த பிறகு பார்த்தால், நம்ம பரோட்டா மாஸ்டர் அங்கே மீண்டும் உட்கார்ந்திருந்தார்...!
’இது மழை செய்த பிழை’ என்கிறார்கள் நண்பர்கள்..!
இது தான் ’ஒரு லைன் ஹெட் லைன் ஆன கதை ’
(பிகு: மேற் குறிப்பிட்ட நியூஸ் சேனலில் சீப் நியூஸ் எடிட்டராக இருக்கும் பரோட்டா மாஸ்டரின் மாதச்சம்பளம் இன்றைய தேதியில் கிட்டத்தட்ட மூன்றரை லட்ச ரூபாய்..
இது ஒரு புறமிருக்க ஊடகத் துறைமீது காதல் கொண்டு இளம் வயதிலிருந்தே மானா மதுரை ஜலால் என்ற பெயரில் எழுத ஆரம்பித்து. ZEE தமிழ் தொலைக்காட்சியில் நியூஸ் எடிட்டராக இருந்த, நேர்மையும், திறமையும் , தகுதியும் ஒருங்கே அமையப்பெற்ற ஜலால் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதும், தற்போது தான் செய்யும் வேலையைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதும் ஊடகத்துறையை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியவைக்கும் விஷயமாகும்.)
(தொடரும்)

No comments:

Post a Comment