Sunday 27 December 2015

A முதல் Z வரை

#################################
A முதல் Z வரை - ஒரு டிரைலர்
#################################
ANANTHA VIKATAN துவங்கி ZEE TAMIL ல் முடிவுற்ற எனது ஊடக பயணம் மிகவும் சுவையானது.
எனது மீடியா அனுபவங்களை A முதல் Z வரை (ANANDA VIKATAN to ZEE TAMIL) என்று எழுத ரெம்ப நாளக ஆசை...!
ஆனால் எனது அனுபவங்களை உள்ளது உள்ளபடியே எழுத ஆரம்பித்தால் அது பல ‘நல்ல’ உள்ளங்களை குத்திக் கிழித்துவிடும் பேராபத்து இருந்ததால் இதுகாறும் நான் எழுத நினைத்ததை எழுதாமல் இருந்து வந்தேன் .
ஆனால் இனி ஐ எஸ் ஐ எஸ் உலகத்தையே பிடித்து கழுத்தை அறுத்து தாலையை துண்டாக்கி விடும் என்றும், உலகம் வெப்பமயமாவதால் நம்ம சென்னையே கடலுக்குள் மூழ்கிவிடும் என்று செய்திகள் வந்து கொண்டிருப்பதாலும்... இன்றைய சூழலில்,
இப்போதே இதை எழுதா விட்டால் இனி எப்போதும் எழுத முடியாது அப்படி எழுதினாலும் படிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் இப்பொதே இன்று முதல் எழுதத் ஆரம்பிக்கிறேன்..
இன்றைய ஊடகங்களில் பணிபுரியும் பலருக்கும்,
குறிப்பாக நம் தொலைக்காட்சிகளில் இருக்கும் குழந்தை தொழிலாளர்கள் பல்ருக்கும் என்னை யார் என்றே தெரியாது.
என்பதாலும் இப்படி ஒரு முக்கியமான பதிவை போடும் போது ஒரு முன் குறிப்பு என்ற வகையில் என்னைப்பற்றிய சில தகவல்களை இங்கே சொல்ல வேண்டியது அவசியம் என்பதாலும் முதலில் என்னை ரெம்ப சிம்பிளாக அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
*****************************************************************
அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையாளருக்கும் கிடைத்திராத அபரிதமான அரிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.
எனக்கு கிடைத்த வாய்ப்புகள் இன்னும் எவருக்கேனும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..!
சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைத்த போதிலும் எந்த இடத்திலும் நான் நின்று நிலைக்கவில்லை..?
அதற்கான காரணங்களும் சூழ்நிலைகளும்கூட மிகவும் சுவாரஸ்யமானவை..!
என்றாலும்
சேர்ந்த இடங்களில் எல்லாம் அதை ஒரு வேலையாக ஒருபோதும் நான் கருதியதில்லை.வாங்குகிற ஊதியத்திற்கு வஞ்சகமில்லாமல் ஏதாவது செய்துவிட்டு அந்த இடம் சுவாரஸ்யமற்றதாக தொடரும் போது அங்கிருந்து ’அடித்துப் பிடித்து’ வெளியேறிவிடுவது எனது வாடிக்கை..
அதிலும் ஆனந்தவிகடன் ’மாணவ பத்திரிகையாளர்’ பயிற்சி முடிந்து மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர். பல ஆண்டுகள் விசேஷ நிருபராகவே சுற்றிக்கொண்டிருந்தேன்.
விகடனில் இன்று கோலோச்சும் பெருமக்கள் பலரும் விகடனில் ஒரு முழுநேர பணியாளராக வேலைக்கு சேர விரும்பி கியூவில் நின்ற கால கட்டத்தில், ஒருநாள் எங்கள் எம் டி அமரர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களும் திரு.ராவ் அவர்களும் சென்னை விகடன் அலுவலகத்தில் பணியில் சேர விருப்பமா..? என்று நேரடியாகவும் பலமுறை மறைமுகமாகவும் கேட்ட போதிலும் அதில் எந்த நாட்டமும் இல்லாமல் சென்னையில் இருந்து கொண்டே..
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே
நாலு திசைகளிலும் நடந்தே திரிந்தவன் நான்.
(அதன் பின்னர் வெகு நாட்களுக்கு பின்னர் அங்கு ஏற்பட்ட அனுபவம் இன்னும் சுவையானது.. அப்போது இன்றைய நம்ம வில்லன் ரா.கண்ணன்(ர்)தான் இந்த அண்ணனுக்கு வேறு ஒரு வழியை காட்டிவிட்டா(ன்)ர்... என்பதெல்லாம் தனிக்கதை அதையெல்லாம் பின்னர் பார்ப்போம்.)
இதற்கிடையில்
வண்ணத்திரை ஆசிரியராக அப்போது இருந்த எம் ஜெ ரெகோ அண்ணனை ஒரு காரணத்தோடு பார்க்க முரசொலி ஆபீசுக்கு போக..
அவர் அடுத்த சில நிமிடங்களில் என்னை அடுத்த அறையில் இருந்த புகழ் சார் என்றழைக்கப்பட்ட கலாநிதி மாறன் முன் கொண்டு போய் நிறுத்தினார்.!
சும்மா போன இடத்தில் அன்றே அங்கு வேலைக்கு சேர குங்குமத்தில் ’விளையாட்டாக’ ஒரு வருஷம் வேலைக்கு போக வேண்டியதாயிற்று.
அங்கு,
இன்று நாடு போற்றும் எழுத்தாளராக கொண்டாடப்படும் நண்பன் எஸ்.ராமகிருஷ்ணன்,கவிஞர் சுகுமாரன், நெல்லைபாரதி ஆகியோர் முன்னிலையில் ஒரே நாளில் கலாநிதி மாறனின் மனசாட்சியை உலுக்கி அவரது கவனத்தைக் கவர,
மறுநாளே முரசொலி மாறனால் அழைக்கப்பட்டு வேண்டாவெறுப்பாக அவரைபோய் பார்க்கப்போக ,
அவரையும் அப்படியே கவர்ந்து...
அவரது செல்லப்பிள்ளையாகி,
பின்னர் முரசொலி வளாகத்திற்குள் அவர் வந்தாலே எனக்கு அழைப்பு வரும் என்ற நிலையில்... அதுவும் போரடிக்க... முரசொலிமாறன் எனக்கு சொன்ன ஒரு வேலையை சொல்லாமல் கொள்ளாமல் எஸ்.ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனதும்.
அதையொட்டிய கிளைக்கதைகளும் சுவையானவை..!
இன்னும் பல அவதாரங்களுக்குப் பிறகு
எனக்கு உதவுவதாக நினைத்து என் நண்பன் கமராஜ் என்னை நக்கீரனில் சேர்த்துவிட
மறு வாரமே பரிதி இளம்வழுதியோடான ஒரு பயணத்துக்கு நான் தயாராக, அவன் நியாயமான காரணங்களைச் சொல்லி தடை போட.. பரிதியுடனான பயணத்தோடு அப்படியே அங்கிருந்து ஒரே வாரத்தில் பேக் அப் ஆனது.! அது ஒரு சுவைக் கதை.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து துன்பமான ஒரு சூழலில்
ரா.கண்ணன் வழிகாட்ட எம்.அருணாசலம் உதவியுடன் 1994 ல் ஜெஜெ டிவியில் தயாரிப்பாளராக சேர்ந்தது..
1995 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பிசு பிசுத்த நிலையில்
அச்சிறுப்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்டமெ இல்லாத இடத்தில் அம்மா வெறும் சாலையை பார்த்து பேசிய சாட்சிகள் ஒளிபரப்பாக..
அதை பார்த்து கடுப்பான அம்மா ஜெஜெ டிவிக்கு போனை போட நான் வேண்டுமென்றே கூட்டம் இல்லாத காணொளியை ஒளிபரப்புக்கு எடுத்துக் கொடுத்து விட்டதாக ஜால்ரா ஒன்று சொன்னதை நம்பிய ஜெ ஜெ டிவி பாஸ்கரன் ‘நீ என்ன கருணாநிதி ஆளா இங்கேயே சுட்டுப்போட்டிருவேன்..’ என்று பிஸ்டலை தூக்கி மிரட்ட.. ஓசியில் தின்று கொழுத்தஆராவமுதன் என்ற அடிமை தன் முரட்டு கையால் என் கன்னத்தில் ஓங்கி அறைய..
மனதுக்குள் அவர்களை சபித்தபடி ,ஆனால் முகத்தில் பயந்து நடுங்குவது போன்ற ஒரு உணர்வைக் காட்டி ..
அங்கிருந்து வெளியே வந்து , மறுபடியும் உள்ளே கூப்பிட்டு விடுவார்களோ என்று அஞ்சி கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வரை தலை தெறிக்க ஓடி.. மூச்சு வாங்க ..
தலை பிரசவத்திற்காக முதல் நாள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என மனைவியைக் காண கிளம்பிப்போனேன்.. !
ஒரு சிறிய விளம்பர இடை வேளை
(இதை கேள்விப்பட்ட எல் ஆர் ஜெகதீசன் பரிதிக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்ல பரிதி என்னவோ ஏதோ என்று பதறிப் போனது இன்னொரு கிளைக்கதை!)
இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சி தொடர்கிறது..
சிலமாதங்கள் நன்றாக மூச்சு வாங்கி ..
சுதந்திரக்காற்றை சுவாசித்து
பின்னர் ஒரு நாள் அண்ணன் ரெகோ மூலம் ரஜ் டிவியில் வேலைக்கு சேர்ந்து,
பத்தே நாளில் ராஜ் டிவி குழுமத்தலைவர் ராஜேந்திரனுடன் வாக்குவாதம் செய்து அங்கிருந்து நின்றது..
இன்னொரு சுவையான அனுபவம்..?
பின்னர் நீண்ட நாட்களுக்கு பின்னர் செய்வதறியாது திகைத்து நின்ற ஒரு நாளில் வலிய வந்து என்னை அழைத்து மின்பிம்பங்களில் வேலை கொடுத்தார் விசி பாரதி என்றழைக்கப்படும் சந்துரு சார்.
எலக்ரானிக் மீடியாவில் என் குரு அவர்,
மின்பிம்பங்களில் வேலைக்கு சேந்து அங்கு பாலகைலாசம் சந்துரு போன்றவர்களை அடக்கி ஆண்டு
அதிரடிகள் பண்ணியதும் ‘கதையல்ல நிஜம் ‘ முதல் பகுதியில் நிர்வாக தயாரிப்பாளரானதும்.
முழு சுதந்திரம் முழுமையான மரியாதை அன்பு கலந்த அங்கீகாரம் என்று ஒரு தாயின் கருப்பையில் இருந்த காலத்துக்கு நிகராக பாதுகாப்பு உணர்வும் மனநிறைவும் இருந்தாலும் கொஞ்சநாளில் அங்கேயும் போரடித்தது ..
பிரான்சுக்கு போகிறேன் என்று கிழம்பி ..
பின்னர் ஒரு டுபாக்கூரிடம் சிக்கி சின்னா பின்னமானதும்..
அதனால் பட்ட பாடுகளும் மன உளைச்சல்களும் .. பெருங்கதைகள்..!
மனம் திருந்தி மீண்டும் (அதாவது 1993 ல் அன் டிவி ஆரம்பித்தபோது அங்கு ஒரு மாதம் வேலை செய்த அனுபவம் உண்டு. அப்போது இது தேறாது என்று தப்புக்கணக்கு போட்டு அங்கிருந்து வெளியேறினேன்.
தப்புகணக்கென்ன
நீ தவறாத கணக்கு போட்டாலும் நீ எங்க நிலைக்கப்போற..? என்று கேட்கும் உங்கள் குரல் எனக்கு தெளிவாய் கேட்கிறது..?)
2007 ல் சன் நியூஸ் 24 X 7 டிவியில் புரோக்ராம் ஹெட் என்ற பொறுப்பில் / நியூஸ் எடிட்டர் என்ற Designation னுடன் வெலைக்கு சேர்ந்தால்....
அது காமடி கஜானாவாக இருப்பதை பார்த்து மனம் நொந்து அங்கே தாக்கு பிடிக்க முடியாமல்
ஆறே மாதத்தில் சன் 24 X 7 செய்தி சேனல் ஆதித்யா டிவிக்கு போட்டியாக போய்க்கொண்டிருக்கிறது என்று அதிரடி செய்து விட்டு வெளியேறியது..
பிறகு சந்துரு சார் ’ZEE TAMIL டிவியை துவங்குகிறேன் வா..’ என்றழைக்க அங்கே சுமார் இரண்டரை ஆண்டுகாலம் தனிக்காட்டு ராஜாவாக சாகசம் நிகழ்த்தியது...! என்று ஆயிரமாயிரம் அனுபவங்கள் என் முன் கொட்டிக் கிடக்கின்றன.
நான் வேலை பார்த்த எந்த இடத்திலுமிருந்து எந்த சூழலிலும் நான் வெளியேற்றப் பட்டதில்லை..!
அதே சமயம் ஈரம் இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொண்டு..
படர்ந்து வளரும் பாசிபோல படியவும் விரும்பியது இல்லை..
பாசியாகி படர்ந்து இன்று அந்த ‘கைக்குழந்தை’ செய்வதைபோல் தன்னைத் தாண்டி வரும் இளைய தலைமுறையினரை வழுக்கி விழவைத்து வேடிக்கை பார்க்கும் அனுபவம் எனக்கும் கிட்டாதது நான் செய்த பாக்கியம்...!
என்னால் உருவாக்கப்பட்ட தம்பிகள் சில இடங்களில் இருந்து நன்றியோடு என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்னால் பயனடைந்தவர்கள் ஏறக்குறைய எல்லா ஊடகங்களிலும் இருக்கிறார்கள்..!
எனக்கு நிரந்தர நண்பர்கள் ஒரு ஒரு சிலர் உண்டு
நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை...?
பல நேரங்கிளில் பலராலும் பரம எதிரியாக பார்க்கப்பட்டிருக்கிறேன்
2007 ஆம் ஆண்டில் அப்போது கூமுட்டைகளின் கூடாரமாக இருந்த சன் 24X7 நியூஸ் தொலைக்காட்சியில் இருந்த போது ஒரு சிலரைத் தவிர அனைவரும் என்னை எதிரியாக பார்த்தார்கள்.அதற்கு காரணம் நிர்வாகத்திடம் ’இந்த நியூஸ் சேனல் ஆதித்யா டிவிக்கு போட்டியாக வந்து கொண்டிருக்கிறது என்று ஆதாரங்களை எடுத்துத் தந்ததும் அதனால் அனேகர் மனது புண்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றபடி எதிரே வருபவர்தான் எதிரி என்பதே என் தாரகமந்திரம்..!
என் குற்றங்களையும் குறைகளையும் எப்போதும் மன்னித்து அருள் பாலிக்கும் நண்பர்கள் இப்போதும் என்னை மன்னிப்பார்களாக..
தொண்ணூருகளின் துவக்கம் துவங்கி நடுப்பகுதிவரை என் சென்னை வாழ்க்கையில் நான் தொலைந்து போகாமல் என்னை காத்தவர்கள் ரெண்டே ரெண்டுபேர் ஒருவர் நண்பன் காமராஜ் இன்னொருவர் அவனால் எனக்கு அறிமுகமாகி பிறகு எனது நெருங்கிய தோழராகிவிட்ட பரிதி இளம்வழுதி.
கைமாறு செய்ய இயலாதவாறு வாழ்க்கையில் கடன் பட்டது இவர்கள் இருவருக்கு மட்டுமே..!
மீடியாவில் எனக்கு உதவியவர் சந்துரு மற்றும் முரளிராமன்.
மேலே குறிப்பிட்டதைப் போல ஊடக வேலையை பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக நான் ஒரு போதும் கருதியதில்லை அதனால்தான் இதை என் பணி அனுபவமாக கருதாமல்
ஒரு பயண அனுபவமாக எழுத வேண்டியிருக்கிறது.
பொதுவாக பத்திரிகையாளர்கள் வெளியே பயணங்கள் போய் வந்து தங்கள் அனுபவங்களை பயணக்கட்டுரையாக எழுதுவார்கள்..
ஆனால் நான் பயணம் செய்ததே பத்திரிகை மற்றும் டிவி ஊடக அலுவலகங்களில்தான்.
பத்திரிகை மற்றும் ஊடக துறையிலேயே இயங்கினாலும் எங்கும் பாசியாக படிந்து கிடக்க எனக்குப் பிடிக்கவில்லை..?
ஒட்டாத பயணம் ஒரு தொடர் ஓட்டமாக இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நான் பார்த்தவற்றை ரசித்தவற்றை இந்த பயணக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்...!
இன்று இது ஒரு டிரைலர் மாத்திரமே...!
எனது பயணம் தொடரும்...
#####################
மருத்துவப் பின்னணி கோண்ட தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு அது,
சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு
அது ஒரு மே மாதத்தின் 21 ஆம் தேதி.
ஆம் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாள்.
புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த அந்த இளம் நிருபரை அழைத்த சேனலின் செய்தி ஆசிரியர்
‘தம்பி சத்யமூர்த்தி பவனுக்கு போ.. அங்க தீவிர வாத எதிர்ப்பு உறுதிமொழி எடுப்பாங்க அத கவர் பண்ணிட்டு வந்திடு..’
என்று அவனுக்கு முதல் அசைன்மென்டை கொடுத்தனுப்பினார்.
கேமிரா மேன் யூனிட் சகிதம் டாட்டா சுமோ வண்டியில் ஏறி உற்சாகத்துடன் சத்யமூர்த்தி பவனுக்கு விரைந்தான் அந்த தம்பி.
சத்யமூர்த்தி பவன் சோகத்தில் சஞ்சரிக்க தம்பியின் உள்மனதிலோ உற்சாகத்தின் கொண்டாட்டம்.!
நியூஸ் கவரேஜ் செய்துவிட்டு அலுவலகம் திரும்பிய அவன் செய்தி ஆசிரியரிடம் சத்திய மூர்த்தி பவன் காட்சிகளை எழுதிக் கொடுத்தான்.
அவன் எழுதியவற்றை படித்தார் செய்தி ஆசிரியர் அதில் ராஜிவ்காந்தி ஸ்ரீபெரும் புதூரில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டது போன்ற விபரங்களை மிஸ் ஆகியிருந்தது ,நல்ல மனம் கொண்டவரான அந்த செய்தி ஆசிரியர் ’பையன் கொஞ்சம் மக்கு’ என்பதை உணர்ந்து கொண்டுடாலும் அவனிடம் கொஞசம் பேசி அவனை அவனை கொஞ்சம் தேத்த முடியுமா..? என்று பார்த்தார்.
அந்த தம்பியை அழைத்தார்,
‘தம்பி எழுதியிருக்கத பார்த்தேன் இன்னும் கொஞ்சம் டீட்டெய்ல் சேத்திருக்கலாம் ... ம்ம் . ராஜிவ்காந்தி எப்படிப்பா செத்தாரு.. ஏதும் தெரியுமா..?’
எங்கே தவறாக சொல்லி விடப் போகிறோமோ என்று உஷார் ஆன அவன் அறைகுறை தயக்கத்தோடு
‘சார் அவரு குண்டு வெடிச்சு செத்து போனாரு..?’ என்றான்
‘சரி.. எந்த ஊருல செத்தாரு தெரியுமா..?’
மீண்டும் பையன் தயக்கத்தோடு
ஸ்ரீபெரும் புதூர்..’ என்று சொல்ல
அவனுக்கு எந்த அளவிற்கு விஷய ஞானம் இருக்கிறது என்று சோதிக்க விரும்பிய செய்தி ஆசிரியர்
‘சரி தம்பி ராஜிவ் காந்தி கூட பொறந்தவங்க எத்தன பேரு.. சொல்லு..?’ என்றார்.
திருதிரு வென ரெம்ப மரியாதையாக முழித்தான் தம்பி.
நிலமையை சகஜமாக்க விரும்பிய செய்தி ஆசிரியர்
‘அவங்க அண்ணந்தம்பி ரெண்டுபேருப்பா..’
என்று சொல்ல
‘ஆமா ஆமா..’ என்று தலையாட்டினான் தம்பி..!
செய்தி ஆசிரியர் அத்தோடு விடாமல்
’ராஜிவ் காந்தி கூட பொறந்த இன்னொருவர் பேரு தெரியுமா..?’ என்று கேட்க..?
சற்றே யோசனையுடன் ‘சஞ்சய்காந்தி..’ என்றான் தம்பி.
‘வெரி குட்..வெரிகுட் !’ என்று மனமகிழ்ந்து பாராட்டிய செய்தி ஆசிரியர்.
அடுத்த கணமே அவனைப்பார்த்து
‘அது சரி ராஜிவ்காந்தி, சஞ்சய் காந்திண்ணு ரெண்டு சகோதரர்கள்... இதுல.. யாரு அண்ணன்.. யாரு தம்பி ?’ என்று கேட்க,
இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத அந்த இளம் நிருபர் தயக்கமே இல்லாமல் நம்பிக்கையோடு சொன்னான்.
‘சஞ்சய் காந்திதான் அண்ணன்.. அவருடைய தம்பிதான் ராஜிவ் காந்தி ’
அவனது குரலில் இருந்த உறுதியை கண்டு திடுக்குற்ற செய்தி ஆசிரியர்.
’அதெப்படிப்பா சஞ்சய் காந்திதான் அண்ணன்ணு அவ்வளவு உறுதியா அடிச்சு சொல்ற..?’ என்று கேட்டார்.
செய்தி ஆசிரியரைப் அசால்ட்டாக பார்த்த அந்த இளம் நிருபர் அலட்சியமாய் சொன்னான்
‘அவருதானசார் மொதல்ல செத்தாரு....!’
நிருபரின் பதிலைக்கேட்டு அதிர்ச்சியின் வெலவெலத்துப்போன அந்த செய்தி ஆசிரியர் இப்போது எங்கே இருக்கிரார் என்று தெரியவில்லை.
ஆனால் ‘முதலில் பிறப்பவன்தான் அண்ணன் என்ற உலக நியதியை மாற்றி ‘முதலில் இறப்பவன்தான் அண்ணன்..’ என்ற புதிய உத்தியை உலகுக்கு உணர்த்தி ,வியக்கவைத்த அந்த இளம் நிருபர் இப்போது பிரபல முன்னணி டிவி சேனலில் செய்தி ஆசிரியராக இருக்கிறார். என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், இன்றைய தேதியில் அவரது சம்பளம் மாதம் இரண்டு லட்ச ரூபாய் என்பது இதயம் பலவீனமானவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாகும் ...!
இவரே இந்த லட்சணம் என்றால் இவர் தேர்வு செய்து வேலைக்கு எடுக்கும் ஆட்களின் நிலமை எப்படி இருக்கும் ..?
இந்த மாதிரியான தம்பிகள் தான் இன்றைய ஊடகங்களில் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்...
பார்க்கும் வேலைக்கு தேவையான அடிப்படை அறிவு இல்லாவிட்டாலும்
அடிபட்டு.. மிதிபட்டு.. அவமானப்பட்டு ..
மைக்குகளால் பல தலைவர்களின் கழுத்தை நெரித்து..
குறுக வேண்டிய இடங்களில் மண்டியிட்டு
நிமிர வேண்டிய இடங்களில் நெஞ்சை உயர்த்தி எழுந்து நின்று..
அறை குறை அனுபவங்களுடன்
வெளியே வீறு நடையும் அலுவலகங்களுக்குள்
பயந்து நடுங்கி சோக நடையும் போட்டு பம்மிக்கொண்டு வரும் இவர்கள்தான் இன்று ஜாம்பவான்கள் என்று கருதப்பட்ட பலரையும் ஓரங்கட்டிவிட்டு இன்று எல்லா இடங்களிலும் அதிகாரங்களைக் கைப்பற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் இளையராஜாவிடம் கேள்வி கேட்ட அந்த தம்பிக்கும் நாளை ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது..!
மற்றபடி எங்கள் காற்றை இன்னும் ஈரமாக வைத்திருக்கும் இயற்கை விஞ்ஞானி - இசைஞானி இளையராஜாவுக்கும் அவரின் சாபத்துக்கு ஆளான அந்த மைக் மோகனுக்கும் இந்த தொடர் சமர்ப்பணம்..!

No comments:

Post a Comment